சுருக்குமடி மீன்பிடி வலை பயன்பாடு விவகாரம் நடுக்கடலில் மீனவர்கள் மோதல்; போலீஸ் துப்பாக்கி சூடு: புதுவை அருகே பதற்றம்

புதுச்சேரி:  புதுச்சேரியில் வீராம்பட்டினம், நல்லவாடு மீனவர்கள் இடையே சுருக்குமடி மீன்பிடி வலை விவகாரம் தொடர்பாக நடுக்கடலில் திடீரென பயங்கர மோதல் ஏற்பட்டது. இருதரப்பும் ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். புதுச்சேரியில் வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் நல்லவாடு உள்ளிட்ட மற்ற மீனவ கிராமத்தினர் இத்தகைய வலைகளை பயன்படுத்துகின்றனர். இந்த விவகாரத்தில் அரசு உறுதியான பதிலை தெரிவிக்கவில்லை. இதனால் தடை செய்யப்பட்ட வலைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் சுருக்குமடி வலை விவகாரத்தில் நல்லவாடு- வீராம்பட்டினம் என இருதரப்புக்கும் நடுக்கடலில் நேற்று திடீரென மோதல் வெடித்தது. நாட்டு வெடிகுண்டு வீசியும், சுளுக்கி, துடுப்பு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஒருவரையொருவர் படகில் நின்றபடி தாக்கியும் மோதலில் ஈடுபட்டனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இது பற்றி இரு கிராம மீனவர்களுக்கும் தகவல் கிடைத்ததும் சுளுக்கி, பைப், கல், பாட்டில்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கடற்கரையில் திரண்டனர். அப்போது பாட்டில், கற்கள், சுளுக்கியை ஈட்டியை போல தூக்கி வீசி சரமாரியாக மோதிக்கொண்டனர். நேருக்கு நேர் மோத தயாரானபோது போலீசார் வானத்தை நோக்கி இரண்டு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனர். இதில் இருதரப்பினரும் கலைந்து ஓட்டம் பிடித்தனர். போலீசார் கடற்கரையில் திரண்டவர்களை கலைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து அப்பகுதிகளில் பதற்றம் நிலவுவதால், சீனியர் எஸ்பி பிரதிக்‌ஷா கொடாரா, தெற்கு எஸ்பி ஜிந்தாகோதண்டராமன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் கடற்கரை பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே நேற்று மாலை வீராம்பட்டினம் மீனவர்கள், நல்லவாடு கடற்கரை பகுதிக்கு படகில் சென்று பட்டாசு வெடித்து எச்சரித்து வந்ததால் பதற்றம் நீடித்தது.

 வன்முறை சம்பவங்களை தடுக்க மீனவ சமுதாயத்தின் முக்கியஸ்தர்களை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. மீனவர்கள் கும்பலாக கூடுவதை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்க போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: