தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை: கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும், இதற்கு மாற்றாக துணி பைகளை விற்பனை செய்ய விழிப்புணர்வு செய்து வருகிறோம் என்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையை சேர்ந்த வணிகர்களுடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று ரிப்பன் மாளிகையில் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை கடைகளில் விற்க மற்றும் பயன்படுத்த கூடாது என வணிகர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது வணிகர்கள், இந்த உத்தரவை செயல்படுத்த தங்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும். உடனடியாக அமல்படுத்தினால், வியாபாரம் பாதிக்கும், என தெரிவித்தனர். ஆனால், அதை ஏற்காத மாநகராட்சி ஆணையர், 10 நாட்கள் அவகாசம் அளிப்பதாக தெரிவித்தார்.

கூட்டத்திற்கு பிறகு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நிருபர்களிடம் கூறியதாவது: கடைகளில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு இதுவரை ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தடை செய்யப்பட்ட 14 வகையான பொருட்கள் பயன்படுத்த கூடாது. பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக துணி பைகள் விற்பனை செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு செய்து வருகிறோம். குப்பையில் இருக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி பயன்படுத்துகிறோம். இதுவரை சென்னையில் 38 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.  சென்னை மாநகராட்சியில் மக்கள் தடுப்பூசி குறித்து மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். தினமும் 1 லட்சம் தடுப்பூசி செலுத்த தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>