×

பண்ணைத் தொழில், சேவைகள் சட்டம் நீக்கம்: பேரவையில் சட்ட முன்வடிவு அறிமுகம்

சென்னை: வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டமசோதா ஒன்றை அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணைத் தொழில் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல்) சட்டம், 2019ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம் இதுவரை நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை. அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஒப்பந்தப் பண்ணை என்பது, உழவரும், விளைபொருளை கொள்முதல் செய்பவரும், அந்தப் பொருளின் விலை, அளவு, தரம் மற்றும் காலம் குறித்து ஒருவருக்கொருவர் ஒப்பந்தம் செய்துகொண்டு, சந்தைப்படுத்துதல் தொடர்பானதாகும்.

ஆனால் 1987ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்துதல் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டம், தமிழகத்தின் வேளாண் உற்பத்திப் பொருளை வாங்குவது மற்றும் விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்த வகை செய்கிறது. தற்போது வேளாண் சந்தைப்படுத்துதல் அமைப்பு, உழவர்களுக்கு அதிக விலை கிடைக்க வழிவகை செய்கிறது. அதன்படி, 1987ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம், வேளாண் விளை பொருட்களை வாங்கவும், விற்கவும் ஒழுங்குமுறைகளை வழங்குவதால், அந்தச் சட்டத்தை மேலும் வலுவூட்டுதலே உகந்தது. எனவே 2019ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணைத் தொழில் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல்) சட்டத்தை நீக்க அரசு முடிவு செய்கிறது.

Tags : Farm Industry, Services Law, Dismissal: Legal Draft
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...