×

போலி பத்திரிகையாளர்கள் களையெடுக்க தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  அதிகாரியாக பணியாற்றியபோது, பொன். மாணிக்கவேல், தவறான அறிக்கைகளை தாக்கல் செய்தது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த சேகர்ராம் என்பவர் பத்திரிகையாளர் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது சேகர்ராம் போலி பத்திரிகையாளர் என்று பொன்.மாணிக்கவேல் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் போலி பத்திரிகையாளர்களை களை எடுப்பது தொடர்பாக விசாரணையை விரிவுபடுத்தியது உயர் நீதிமன்றம்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு அளித்த உத்தரவு வருமாறு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனி அதிகாரியாக பணியாற்றிய பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. விசாரணையின்போது, தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஏராளமான போலி நபர்கள் உலவி வருகிறார்கள். பாரம்பரியமான அச்சு ஊடகங்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் உள்ள நிலையில் தற்போது ஆன்லைன் என்ற பெயரில் சேனல்கள் உருவாகி வருகின்றன.யூடியூப், இன்ஸ்டாகிராம் தளங்களில் கணக்கை தொடங்கும் பலர் தாங்களும் மீடியா என்று கூறி பத்திரிகையாளர்களைப்போல் வலம் வருகிறார்கள். ஊடகங்களில் செய்தி வாசிப்பவர்களும் தங்களை பத்திரிகையாளர்கள் என்று அழைத்துக்கொள்கிறார்கள். போலி பத்திரிகையாளர்களால் கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. லெட்டர் பேடு சங்கங்கள் கொடுக்கும் அடையாள அட்டைகளை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வதில் பலர் ஈடுபடுகிறார்கள்.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி பத்திரிகையாளர்களில் உள்ள போலிகளை களைய வேண்டும். அதற்காக இந்த நீதிமன்றம் அரசுக்கு சில உத்தரவுகளை பிறப்பிக்கிறது. அதாவது, உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், மூத்த பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய  தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை 3 மாதங்களில் தமிழக அரசு ஏற்படுத்த  வேண்டும். கவுன்சில் உறுப்பினர்களாக வரும் பத்திரிகையாளர்கள் தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களிலிருந்து சம்பள சான்று உள்ளிட்ட ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும். பிரஸ்கிளப் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்களை அங்கீகரிக்கும் அதிகாரத்தை பிரஸ் கவுன்சிலுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.  தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மட்டுமே  பத்திரிகையாளர் சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும். தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மூலமாக மட்டுமே பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டுமே தவிர, நேரடியாக வழங்க கூடாது.

போலி பத்திரிகையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்க கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். இந்த அடிப்படையில் அங்கீகார அடையாள அட்டை வழங்கும் விதிகளில் 3 மாதங்களில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும். குறைந்தபட்சம் தினமும் 10 ஆயிரம் பிரதிகளை அச்சிடாத பத்திரிகைகளுக்கு அங்கீகார அட்டை வழங்க கூடாது. இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறினால் செய்தி மற்றும் மக்கள் தொடர்புதுறை இயக்குனர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும். விசாரணை ஆறு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Press Council ,ICC , Fake Journalists, Press Council, Government, ICC
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது