×

தமிழகத்தில் சுமார் 80% பேர் டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை,: தமிழகத்தில் சுமார் 80% பேர் டெல்டா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சுகாதாரத்துறை தரப்பில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. செப்டம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்க இருக்கும் நிலையில், சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், டெல்டா வகை கொரோனா வைரஸை கண்டறிய சென்னையில் மரபணு ஆய்வகம் அமைக்க பட்டுள்ளது. அங்கு விரைவில் பரிசோதனை தொடங்க உள்ளது. தமிழகத்தில் டெல்டா வகை வைரஸ் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 80% பேர் டெல்டா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள். டெல்டா வகை கொரோனா வைரஸ் 100% பாதிப்பை ஏற்படுத்துகிறது. மக்கள் அச்சப்பட வேண்டாம். டெல்டா வகை கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் தமிழகத்தில் இருக்கின்றன. பண்டிகைக் காலம் வருவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கூட்டத்தினால் தான் கொரோனா அதிகமாக பரவுகிறது. தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து கூட்டம் கூடாமல் பார்த்துக் கொண்டால் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும், என்றும் கூறினார்.

Tags : Tamil Nadu ,Radhakrishnan , டெல்டா கொரோனா
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...