இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்: புஜாராவின் பணி இன்னும் முடிந்து விடவில்லை: ரோகித் சர்மா பேட்டி

லீட்ஸ்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 3வது டெஸ்ட் லீட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 78 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட் 121 ரன் விளாசினார். 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன் எடுத்திருந்தது. 3வது நாளான நேற்று மேலும் 9 ரன் சேர்த்து 432 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. ஓவர்டன் 32, ராபின்சன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர். இந்திய தரப்பில் முகமது ஷமி 4, பும்ரா, ஜடேஜா, சிராஜ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 354 ரன் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது.

ரோகித்-கே.எல்.ராகுல் இருவரும் நிதானமாக ஆடி 19 ஓவர் வரை விக்கெட்டை பறிகொடுக்காமல் தாக்குப்பிடித்தனர். 54 பந்துகளை சந்தித்து 8 ரன் எடுத்த கே.எல்.ராகுல் ஓவர்டன் பந்தில் பேர்ஸ்டோவின் ஒற்றை கை கேட்ச்சால் ஆட்டம் இழந்தார். இதையடுத்து ரோகித்சர்மாவுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுமையாக ஆடினர். அரைசதம் அடித்த ரோகித்சர்மா 59 ரன்னில் (156 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) ராபின்சன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். பின்னர் விராட் கோஹ்லி களம் இறங்கினார். முதல் இன்னிங்சில் செய்த தவறுக்கு பரிகாரம் தேடும் வகையிலும் புஜாராவும், கோஹ்லியும் பொறுப்பாக ஆடினர். நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 80 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன் எடுத்திருந்தது.

புஜாரா 91 (180 பந்து, 15 பவுண்டரி), கேப்டன் கோஹ்லி 45 ரன்னுடன் (94 பந்து, 6 பவுண்டரி) களத்தில் உள்ளனர். இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இந்தியாவுக்கு இன்னும் 139 ரன் தேவை என்ற நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் நடக்கிறது. ஒருவேளை இந்தியா இன்று முழுவதும் விளையாடினால், தோல்வியை தவிர்க்கும் வாய்ப்பு உள்ளது. நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய வீரர் ரோகித்சர்மா கூறியதாவது: புஜாரா அடித்து ஆடி ரன் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் களம் இறங்கினார். எங்கள் இன்னிங்ஸ் எப்போதும் தோல்வியில் இருந்து தப்பித்து டிரா செய்ய வேண்டும் எண்ணத்தில் இருக்காது. ரன் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அதை புஜாரா தெளிவாக காட்டினார். புஜாராவை, பல ஆண்டுகளாக நாங்கள் பார்த்திருக்கிறோம், அவர் மிகவும் ஒழுக்கமான பேட்ஸ்மேன். அவர் ரன் எடுக்காததால் தரம் காணாமல் போய்விட்டது என்று அர்த்தமல்ல. தரம் எப்போதுமே இருந்தது, 300 ரன் பின்தங்கிய நேரத்தில் பேட்டிங் செய்வது எளிதான சூழ்நிலை அல்ல. எங்கள் குழுவின் பணி இன்னும் முடிக்கப்படவில்லை. முக்கியமான 2 நாட்கள் உள்ளன. நம்பிக்கையுடன் விளையாடுவோம், என்றார். இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஓவர்டன் கூறுகையில், இந்த டெஸ்டில் நாங்கள் இன்னும் சிறந்த நிலையில் இருக்கிறோம், இன்று காலையில் புதிய பந்தில் விரைவாக விக்கெட் எடுத்து இந்தியாவுக்கு நெருக்கடி அளிப்போம், என்றார்.

Related Stories:

More