கூடலூரில் மேலும் ஒரு கும்கி வரவழைப்பு பலத்த மழையால் யானைகளை விரட்டுவதில் சிக்கல்

கூடலூர் : கூடலூர் அருகே உள்ளது தேவாலா, நாடுகாணி. இந்த பகுதிகளில் கடந்த சில மாதங்களாக 2 காட்டு யானைகள் வீடுகளை இடித்து சேதப்படுத்தின. பொதுமக்கள் போராட்டத்தை அடுத்து அட்டகாசம் செய்யும் 2 காட்டு யானைகளை விரட்ட வனத்துறை தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி முதுமலையில் இருந்து  பொம்மன், சுஜய், சீனிவாஸ் ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. அவைகள் காட்டு யானைகளை அடர்ந்த வனத்துக்கு விரட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

பொன்னூர் மற்றும் முன்டக்குன்னு பகுதியில் விரட்டும் பணி நடந்தது. அப்போது 2 யானைகளுடன் கொம்பன் என்ற மேலும்  யானையும் சேர்ந்து கொண்டது. இதனால் வனத்துறைக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. நேற்று முன்டக்குன்னு கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. யானைகளை அடர்ந்த வனத்துக்குள் விரட்ட மேலும் ஒரு கும்கி தேவைப்படும் என்று எண்ணிய வனத்துறை முதுமலையில் இருந்து விஜய் என்ற மேலும் ஒரு கும்கியை அழைத்து வந்தனர். 4 கும்கிகளுடன் யானைகளை விரட்டும் பணியில் அனுபவம் பெற்ற பாகன்களும் வரவழைக்கப்பட்டனர்.

நேற்று காட்டு யானைகளை விரட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பலத்த மழை மற்றும் அடர்ந்த மேகமூட்டம் நிலவியது. இதனால் யானைகள் இருக்கும் இடம் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் காட்டு யானைகளை விரட்டும் பணி தாமதமானது. இந்நிலையில் கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு  ஓம்காரம் தலைமையில் நாடுகாணி தாவரவியல் பூங்காவில் வனத்துறையினருடன்  ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் யானைகளை கேரள வனப்பகுதிக்கு விரட்டியடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கேரள வனப்பகுதிக்கு விரட்டும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணி தொடர்ந்து நடக்கும் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, காட்டு யானைகள் அரிசி, பருப்பு, உப்பு, சிறு தானியங்கள் போன்றவைகளை தின்று பழகிவிட்டது. இனிமேல் எங்கு விரட்டினாலும் குடியிருப்பையொட்டி புகுந்து விடும். யானைகளை கேரளா  வனப்பகுதிக்குள் விரட்டுவதைவிட மயக்க ஊசி செலுத்தி முதுமலைக்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கலாம்.

அல்லது முகாமில் வைத்து பராமரிக்கலாம். அப்போதுதான் யானைகளுக்கும் பாதுகாப்பு, பொதுமக்களும் நிம்மதியாக இருக்க முடியும் என்று கூறினர். பலத்த மழை மற்றும் அடர்ந்த மேகமூட்டத்துடன் நேற்று யானைகள் இருக்கும் இடம் குறித்து கண்காணிக்கப்பட்டது. ஆனால் யானைகள் தென்படவில்லை. யானைகளை விரட்டும் பணியில் 4 கும்கிகளுடன் வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories:

>