ஊட்டி நகராட்சி மார்க்கெட் பிரச்னை மாவட்டம் முழுவதும் 30ம் தேதி கடை அடைப்பு

ஊட்டி : ஊட்டி  நகராட்சி மார்க்கெட் பிரச்னைக்கு இரு நாட்களுக்குள் தீர்வு காணப்படவில்லை  எனில், வரும் 30ம் தேதி நீலகிரி மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு  போராட்டம் நடத்தப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனர். ஊட்டி நகராட்சி  மார்க்கெட்டில் மளிகை, காய்கறி, துணிக்கடை, இறைச்சி கடைகள் உட்பட 1587  கடைகள் உள்ளன. நான்கு தலைமுறைகளாக கடைகளை வைத்து பலரும் வியாபாரம் செய்து  வருகின்றனர். இந்த நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு கடந்த பல  ஆண்டுகளாக குறைந்த அளவிலான வாடகையே நகராட்சி நிர்வாகம் வசூலித்து வந்தது.

ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்  மார்க்கெட் கடைகளுக்கு நகராட்சி  நிர்வாகம் திடீரென பல மடங்கு வாடகை கட்டணத்தை உயர்த்தியது. இது வியாபாரிகளை  அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், இந்த வாடகை கட்டண உயர்விற்கு  வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது மட்டுமின்றி, பழைய வாடகை  கட்டணத்தையே செலுத்தி வந்தனர்.  நகராட்சி நிர்வாகம் அவ்வப்போது  நோட்டீஸ் அனுப்பி உயர்த்தப்பட்ட புதிய வாடகை கட்டணத்தை செலுத்தக்கோரி  தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் செலுத்த முடியவில்லை.

 மின் வாரியத்திற்கும் கட்டணத்தை  செலுத்த முடியவில்லை எனக்கூறி நகராட்சி நிர்வாகம் ஒரு வாரத்திற்குள் வாடகை  பாக்கியை செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால், வியாபாரிகள்  உயர்த்தப்பட்ட வாடகை கட்டணத்தை செலுத்தாத நிலையில், கடந்த 25ம் தேதி ஊட்டி  நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்க போலீஸ் பாதுகாப்புடன்  நகராட்சி அதிகாரிகள் வந்தனர்.

அவர்களை எதிர்த்து வியாபாரிகள் போராட்டத்தில்  ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை போலீசார் கைது செய்த  நிலையில், ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள 736 கடைகளுக்கு சீல்  வைக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், 3 நாட்களாக  மற்ற கடைகளும் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நகராட்சி  மார்க்கெட் கடைகளை மீண்டும் திறக்கும் முயற்சியில் தற்போது வியாபாரிகள்  பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று  கூட்டம் ஒன்று நடந்தது. கூட்டத்தில் வியாபாரிகளின் கருத்துகள்  கேட்கப்பட்டது. கருத்துகேட்புக்கு பின் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர்  முஸ்தபா மற்றும் நீலகிரி மாவட்ட வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்  பரமேஷ்வரன் ஆகியோர் கூறியதாவது:

ஊட்டி நகராட்சி மார்க்கெட் பிரச்னை தமிழக  முதல்வரிடம் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. இப்பிரச்னை சுமூகமாக முடியும் என  எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஊட்டி நகராட்சி ஆணையாளரின் அடாவடி  போக்கால் கடைகள் திறக்கப்படாமல் உள்ளது. 2 நாட்கள் பொருத்திருந்து  பார்ப்போம்.அதற்குள் கடைகளை திறக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை  எடுக்கவில்லை எனில், வரும் 30ம் தேதி (திங்கட்கிழமை) தமிழக அரசின் கவனத்தை  ஈர்ப்பதற்காக மாவட்டம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்.  அதன்பின்னும் முடிவு எட்டப்படவில்லை எனில், குடும்பத்துடன் ஊட்டியில் சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரூ.3 கோடிக்கு மேல் நஷ்டம்

ஊட்டி  நகராட்சி மார்க்கெட்டில் காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் ஆகியன உள்ளன. நகராட்சி  நிர்வாகம் இறைச்சி கடைகள், காய்கறி மண்டிகளுக்கு சீல் வைத்துள்ளது. அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், உயிருள்ள கோழிகளுக்கு தானியங்கள்கூட போட முடியாத நிலையில் அவை  இறந்து வருகின்றன. மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி போன்றவைகளும்  கடைகளில் கெட்டுப்போக துவங்கியுள்ளன. காய்கறிகளும் அழுக  துவங்கியுள்ளன. இதனால், 3 நாட்களில் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில்  உள்ள வியாபாரிகளுக்கு ரூ.3 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என  வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>