வாணியம்பாடி கச்சேரி சாலையில் குடியிருப்புகளில் கழிவுநீருடன் கலந்த மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்-அதிகாரிகள் சமரசம்

வாணியம்பாடி :  வாணியம்பாடி கச்சேரி சாலையில் கழிவுநீருடன் மழைநீர் குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், பகல் நேரங்களில் வெயில் கொளுத்தியும், மாலையில் மழை பெய்தும் வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், வாணியம்பாடி கச்சேரி சாலை பகுதியில் உள்ள காமராஜபுரத்தில் மழையின் காரணமாக அப்பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் சேர்ந்து சாலையில் செல்வதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

மேலும், நேற்று முன்தினம் இரவு வாணியம்பாடி சுற்றுப்பகுதியில் பெய்த மழையால், கச்சேரி சாலை பகுதியில் உள்ள காமராஜபுரம் பகுதியில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து குடியிருப்பு பகுதியில் வந்ததால் ஆத்திரமடைந்தனர். தொடர்ந்து நேற்று காலை எம்ஜிஆர் சிலை முன் காமராஜபுரம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவலறிந்த வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகள் மற்றும் வாணியம்பாடி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பழனிசெல்வம் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, உடனடியாக கால்வாய்கள் தூர்வாரப்பட்டு மழைநீர் தேங்காமல் சீரமைக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையேற்று காமராஜபுரம் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>