×

பொன்னமராவதி அருகே சொத்து தகராறில் கடப்பாறையால் அடித்து கொத்தனார் கொலை-3 பேர் கைது, உறவினர்கள் சாலைமறியலால் பரபரப்பு

பொன்னமராவதி : பொன்னமராவதி அருகே சொத்து தகராறில் கொத்தனாரை கடப்பாறையில் அடித்துக்கொலை செய்த அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கண்டெடுத்தான்பட்டி -இடையன்பாறை கிராமத்தைச் சேர்ந்த சின்னையா மகன் நடேசன் (50). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரின் தந்தை சின்னையாவின் அண்ணன் முத்தாண்டியும், அவரது மனைவி அடைக்கியும் இடையன்பாறை கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு குழந்தை இல்லை. ஏற்கனவே முத்தாண்டி இறந்து விட்டார். இந்நிலையில் நடேசன் தனது பெரியம்மாவான அடைக்கியை பராமரித்து பார்த்துகொண்டு வந்துள்ளார். அடைக்கி வசித்து வந்த தனது வீட்டின் அருகே நடேசன் ஆட்டு கூடத்திற்கு தகர கொட்டகை அமைத்துள்ளார். இதனையறிந்த அடைக்கியின் தங்கை கொன்னையம்பட்டியை சேர்ந்த பாப்பாத்தி மகன் முருகன் (28), சுப்ரமணியன் (27) ஆகிய இருவரும் இடையான்பாறைக்கு வந்து எனது பெரியம்மா அடைக்கியின் சொத்து எங்களுக்கு தான் என்று தகர கொட்டகையை பிரித்து எறிந்துள்ளனர். அப்போது ஏன் இப்படி செய்கிறீர்கள் என நடேசன் கேட்டுள்ளார்.

இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. நடேசன் கம்பியால் சுப்ரமணியனை தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த சுப்ரமணியன் அருகில் கிடந்த கடப்பாறையில் நடேசன் தலையில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து நடேசன் ரத்த வெள்ளத்தில் இறந்தார். இதுகுறித்து நடேசனின் மனைவி பஞ்சவர்ணம் காரையூர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காரையூர் போலீசார் நடேசனின் உடலை கைப்பற்றி வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக கொன்னையம்பட்டியைச் சேர்ந்த முருகன்(28), அவரது சகோதரர் சுப்பிரமணியன்(27) மற்றும் இடையம்பாறையைச் சேர்ந்த சுந்தரம் ஆகிய மூன்று பேரை காரையூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட நடேசனின் உறவினர்கள் நேற்று மாலை காரையூர் மெயின்ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து இலுப்பூர் டிஎஸ்பி அருள்மொழி அரசு சாலைமறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவேண்டும் என தெரிவித்தனர். இதற்கு காவல்துறை தரப்பில் 8 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கபட்டுள்ளது. விரைவில் கைது செய்துவிடுவோம் என தெரிவித்தனர்.

இதனையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் சுமார் அரை மணிநேரம் பொன்னமராவதி, புதுக்கோட்டை சடையம்பட்டி பகுதிக்கு செல்லும் பேருந்துகள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிரச்னை கருதி வலையப்பட்டி அரசு மருத்துவமனையில் இருந்து நடேசனின் சடலத்தை போலீசார் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Ponnamaravathi , Ponnamaravathi: In a property dispute near Ponnamaravathi, Kothanarai was beaten to death by his brother and 3 others, including his brother.
× RELATED பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் கோலாட்டம் அடித்து வழிபாடு