×

190 பேர் பலி கொண்ட காபூல் இரட்டைக் குண்டு வெடிப்புக்குக் காரணமான ஐஎஸ்ஐஎஸ் -கே தீவிரவாத அமைப்பு... யார் இவர்கள்?

காபூல் : ஐஎஸ்ஐஎஸ்-கே என்றால் என்ன?

கடந்த 2012ம் ஆண்டில் ஈரான், துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள ‘கோரசான்’ பகுதியில் தீவிர இஸ்லாமிய அமைப்பு உருவாக்கப்பட்டது. இவர்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, கடந்த 2014ம் ஆண்டு அவர்கள் பக்கம் சாய்ந்தனர். தொடர்ந்து, தீவிர இஸ்லாமிய அரசு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உலகளாவிய ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில், சுமார் 20 வகையான பிரிவுகள் உள்ளன. அவற்றில் மிகவும் ஆபத்தான பிரிவுதான் ‘ஐஎஸ்ஐஎஸ்-கே’ எனப்படும் ‘கோராசன்’ பிரிவு. இந்த ‘கோராசன்’ நெட்வொர்க் ஆனது, தெற்காசியா நாடுகளில் வலிமையாக உள்ளது. இவர்களுக்கு அல்கொய்தா அமைப்பின் முக்கிய தலைவர்களின் ஆசீர்வாதமும், தொழில்நுட்ப வசதிகளும், ஆயுதங்கள் கையாளும் திறனும் கொடுக்கப்படுகிறது.

‘ஐஎஸ்ஐஎஸ்-கே’ அமைப்பானது, ஆப்கானை கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பினரிடம் இருந்து வெளியேறும் தீவிரவாதிகளை, தங்களது அமைப்பில் சேர்த்து, சர்வதேச பயங்கரவாத சதிகளை அரங்கேற்றி வருகிறது. குறிப்பாக, தலிபான் அமைப்பை விட்டு வெளியேறிய தீவிரவாதிகளை, ஐஎஸ் அமைப்பினர் தளபதிகளாக ஆக்குகின்றனர். உஸ்பெக், தாஜிக், வெயிகர் மற்றும் செச்சன்யா நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ‘ஐஎஸ்ஐஎஸ்-கே’ பிரிவில் சேர்ந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த ‘ஐஎஸ்ஐஎஸ்-கே’ பிரிவானது,  ஆப்கானிஸ்தானில் தங்களது புதிய கிளையை உருவாக்க முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பால் தலிபானுக்கு ஆபத்து

காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பிறகு ஆப்கானை கைப்பற்றிய தலிபான்  மற்றும் பாகிஸ்தான் அரசு ஆகியன கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு தீவிரவாத அமைப்பின் மீது மற்றொரு தீவிரவாத அமைப்பு பழிபோடும் விளையாட்டை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. காபூல் குண்டுவெடிப்புக்கு காரணம் தலிபான்களா?,  ஐஎஸ்ஐஎஸ்-கே தீவிரவாத அமைப்பா? என்ற கேள்விகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் வானொலிக்கு பேட்டியளித்த தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா  முஜாஹித், ‘எங்களது படையினர் தங்கியிருக்கும் இடத்திலும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. எங்களது குழுவினர் தங்கள் உயிரைப்  பணயம் வைத்து காபூல் விமான நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கும்  ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பால் ஆபத்து உள்ளது’ என்று கூறினார்.


Tags : ISIS-K ,Kabul , ஐஎஸ்ஐஎஸ்-கே
× RELATED பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை...