×

தனியாரால் தரமற்ற எம்.சாண்ட் விற்பதை கட்டுப்படுத்த டெண்டர் நடைமுறை ரத்து: கோவையை தலைமையிடமாக கொண்டு மண்டலம்; சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

சென்னை : பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்ட அறிவிப்பு:
*கட்டிட கட்டுமானங்களில் பிரதானமாக பயன்படுத்தப்படும் நொறுக்கப்பட்ட கல் மணல் அல்லது தயாரிக்கப்பட்ட மணல் (எம்.சாண்ட்) தரத்தினை உறுதி செய்யும் பொருட்டு தனியாரால் விற்கப்படும் எம்.சாண்டினை பரிசோதனை செய்து தரமற்ற எம்.சாண்டினை கண்டறிந்து, கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* சென்னை மற்றும் திருச்சி மண்டலங்களை மறுசீரமைத்து கோயம்புத்தூரை தலைமை இடமாக கொண்டு ஒரு கூடுதல் மண்டலம் உருவாக்கப்படும்.
* ஒப்பந்தக்காரர் பதிவு ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்தல் என்பதில் இருந்து மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை என மாற்றப்படும்.
* புதிய ஒப்பந்தக்காரர் பதிவு மற்றும் புதுப்பித்தல், மண்டல தலைமை பொறியாளர்கள் அளவிலேயே இனி மேற்கொள்ளப்படும்
* தொகுப்பு முறையிலான ஒப்பந்தப்புள்ளி (பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம்) கோரும் நடைமுறை ரத்து செய்யப்படும்.
* பொதுப்பணித்துறை வாயிலாக மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளில் ரூ.15 கோடி மதிப்பீட்டிற்குள்ளான சிவில் மற்றும் மின் பணிகளுக்கு தனித்தனியாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
* முன்தகுதி ஒப்பந்தப்புள்ளிக்கான நிதி உச்சவரம்பு ரூ.2 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்படும்.
* 6 புதிய மாவட்ட தலைமையகங்களில் (செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி, மயிலாடுதுறை) தலா ரூ.7.05 கோடியில் புதிய சுற்றுலா மாளிகைகள் ரூ.42.30 கோடியில் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* திருச்சி, கடலூர், நாகப்பட்டினம், மதுரை, திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, ஜமுனாமரத்தூர் ஆகிய ஆறு இடங்களில் ரூ.37.98 கோடியில் கூடுதல் சுற்றுலா மாளிகைகள் கட்டப்படும்.
* விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகரில் ஒரு சுற்றுலா மாளிகை கட்டப்படும்.
* மதுரையில் சுற்றுலா மாளிகை பிரதான கட்டிடம் மற்றும் கூடுதல் கட்டிடங்களை ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* தலைமை கட்டிட கலைஞர், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்களுக்கு பழைய வானகங்களுக்கு பதிலாக 8 புதிய மகிழுந்துகள் மற்றும் 22 புதிய ஈப்புகள் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* கடலூரில் 3 உட்கோட்டங்கள், 5 பிரிவு அலுவலகங்கள் உள்ளடக்கிய ஒரு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் ரூ.4.65 கோடியில் உருவாக்கப்படும்.
* கள்ளக்குறிச்சியில் மருத்துவ பணிகள் மேற்கொள்ளும் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலுவலகங்கள் ரூ.2.75 கோடியில் உருவாக்கப்படும்.
* மதுரையில் ரூ.75 லட்சம், திண்டுக்கல்லில் ரூ.45 லட்சம், காரைக்குடியில் ரூ.100 லட்சம், தூத்துக்குடியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் உபகோட்ட அலுவலக கட்டிடங்கள் கட்டப்படும்.
* சென்னை, தரமணி, பொதுப்பணித்துறை வளாகத்தில் மழைநீர் வடிகால் அமைப்புகள், சேதமடைந்த உட்புற சாலைகள், சுற்றுச்சுவர் மற்றும் இதர மேம்பாட்டு பணிகள் ரூ.4.68 கோடியில் மேற்கொள்ளப்படும்.
* சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை வளாகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் உணவுக்கூடம் அமைக்கப்படும்.
* தலைமை செயலகம் பொதுப்பணித்துறை அலுவலகம் ரூ.132 லட்சத்தில் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கணினி மயமாக்கப்படும்.
* நீலகிரியில் அரசு பணியாளர்களின் பழைய குடியிருப்புகளுக்கு பதிலாக 160 புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகள் ரூ.56.70 கோடியில் மேற்கொள்ளப்படும்.
* பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு திருச்சியில் ரூ.3.05 கோடி, திருவாரூரில் ரூ.1 கோடி, கோயம்புத்தூரில் ரூ.4.25 கோடி, உதகமண்டலத்தில் ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் 23 புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.
* சென்னை தண்டையார்பேட்டை பொதுப்பணித்துறை பண்டகசாலை அரசு ஊழியர் குடியிருப்பில் 9 தொகுப்பில் 54 குடியிருப்புகள் ரூ.1.33 கோடியில் புனரமைக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.



Tags : M.Sand ,Coimbatore ,Minister ,EV Velu ,Legislative Assembly , Non-standard M.Sand, Tender Procedure, Legislature, Minister E.V.Velu
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...