சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2,000 கோடியில் 250 கி.மீ. சாலைகள் 4 வழி சாலைகளாக அகலப்படுத்தப்படும்: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

சென்னை: தமிழக  சட்டப் பேரவையில் நேற்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை  மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்த பின்பு  புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:  நடப்பாண்டில் போக்குவரத்து  செறிவு அதிகமுள்ள 250 கி.மீ., சாலைகளை ரூ.2000 கோடி மதிப்பில் நான்கு  வழித்தட சாலைகளாகவும், 600 கி.மீ., சாலைகளை ரூ.1200 கோடி மதிப்பில்  இருவழிச் சாலைகளாகவும் அகலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சிவகங்கை, பார்த்திபனூர், கமுதி,  திருத்துறைப்பூண்டி, அம்பாசமுத்திரம், பவானி, அருப்புக்கோட்டை (மேற்கு)  மற்றும் உத்திரமேரூர் ஆகிய புறவழிச்சாலைகளுக்கான கட்டுமானப் பணிகள்  ரூ.595.54 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

சென்னை பெருநகர பகுதியில்,  போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மத்திய கைலாஷ் சந்திப்பில்  ராஜீவ் காந்தி சாலை மற்றும் சர்தார் பட்டேல் சாலையை இணைக்கும் வகையில் ரூ.56  கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்படும்.  மவுண்ட் பூந்தமல்லி ஆவடி  சாலையில் ராமாபுரம் மற்றும் முகலிவாக்கம் சந்திப்புகளில் 3.14 கி.மீ.  நீளத்திற்கு உயர் மட்ட சாலை அமைக்கப்படும். மவுண்ட் மேடவாக்கம் சாலை  மற்றும் உள்வட்ட சாலை சந்திப்பில் கீழ்பாலம் அமைக்கப்படும். மேற்கூறிய இரு  பணிகள் ரூ.403 கோடி மதிப்பில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன்  ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும்.

16 மாவட்டங்களில் உள்ள 558 கிராமங்களில்  வசிக்கும் சுமார் 15 லட்சம் மக்கள் பயனடையும் வகையில் ரூ.425 கோடி  மதிப்பில் 75 ஆற்றுப்பாலங்கள் நபார்டு வங்கி கடனுதவியுடன் கட்டப்படும். ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் படிப்படியாக தரம் உயர்த்தப்படும்.  முதல் கட்டமாக 2000 கி.மீ., நீளச் சாலைகள் தரம் உயர்த்தப்பட்டு பணிகள்  தொடங்கப்படும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: