×

மாநிலங்களவை எம்.பி தேர்தல் திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா வேட்புமனு தாக்கல்

சென்னை: தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை எம்பி பதவிக்கு திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் இருந்து அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முகம்மது ஜான் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி மரணம் அடைந்தார். இதனால், தமிழ்நாட்டில் இருந்து மேல்சபை செல்லும் எம்பிக்களின் ஒரு இடம் காலியானது. இந்த காலி இடத்தை நிரப்புவதற்காக செப்டம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24ம் தேதி தொடங்கியது. வரும் 31ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.  

செப்டம்பர் 1ம் தேதி வேட்புமனு மீது பரிசீலனை நடைபெறும். செப்டம்பர் 3ம் தேதி வரை வேட்புமனுவை திரும்ப பெறலாம். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் செப்டம்பர் 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடந்த வாரம் அறிவித்து இருந்தார். முதல் நாளில், சுயேச்சை வேட்பாளராக தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த கே.பத்மராஜன் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி பதவிக்கு திமுக சார்பில் வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா சட்டப்பேரவை செயலாளரிடம் மனு தாக்கல் செய்தார். அப்போது எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், திருச்சி சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்களே மாநிலங்களவை எம்பியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்படி, தமிழக சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் 132 பேர் உள்ளனர். கூட்டணி கட்சியினர் பலம் 26 ஆக உள்ளது. எனவே திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரே, தமிழக மாநிலங்களவை எம்பி பதவிக்கு நடைபெறும் தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. வெற்றிபெறும் மாநிலங்களவை எம்பி 2025ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி வரை பாராளுமன்ற மேல்சபை எம்பியாக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : DMK ,MM Abdullah , State Assembly, Election, DMK Candidate, MM Abdullah
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி