×

வீடு, கல்வி, வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட 108 முகாம்களில் இலங்கை தமிழர்களுக்கு ரூ.317.40 கோடியில் பல்வேறு திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்

சென்னை: தமிழகம் முழுவதும் 108 முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு வீடு, கல்வி, வேலைவாய்ப்பு உறுதி, வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட ரூ.317.40 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில், விதி 110ன் கீழ் அளித்த அறிக்கையில் கூறி இருப்பதாவது: கடந்த சில ஆண்டுகளாக அகதிகளாக முறையான அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வரக்கூடிய இலங்கை தமிழர்களுக்கு, இனி பாதுகாப்பான, கவுரவமான, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்து தருவதை இந்த அரசு உறுதிசெய்யும்.  இதற்காக, அவர்கள் தங்கியிருக்கும் முகாம்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  அவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், பின்வரும் அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்:

 இலங்கை தமிழர்களது முகாம்களில், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7 ஆயிரத்து 469 வீடுகள், ரூ.231 கோடியே 54 லட்சம் செலவில் புதிதாக கட்டித்தரப்படும். இதில் முதற்கட்டமாக 3 ஆயிரத்து 510 புதிய வீடுகள் கட்டுவதற்கு, நடப்பு நிதி ஆண்டில் ரூ.108 கோடியே 81 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  முகாம்களில் உள்ள மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  இதை தவிர, ஆண்டுதோறும் இதுபோன்ற வசதிகளை செய்து தர ஏதுவாக, இலங்கை தமிழர் வாழ்க்கை தர மேம்பாட்டு நிதியாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த அடிப்படை வசதிகள் மட்டுமல்லாமல், அவர்களின் பிள்ளைகளின் கல்வி மேம்பட, வாழ்வு சிறக்க பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 பொறியியல் படிப்பு பயிலுவதற்கு தேர்ச்சிபெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில், முதல் 50 மாணவர்களுக்கு, அனைத்து கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும். மேலும், வேளாண், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பிலும் மதிப்பெண் அடிப்படையில் முதல் 5 மாணவர்களுக்கும், மேற்சொன்ன கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை அரசே ஏற்றுக்கொள்ளும். அதுமட்டுமின்றி, முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் அனைத்து முகாம்வாழ் மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை அரசே ஏற்றுக் கொள்ளும். இதற்காக ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

 முகாம்வாழ் இலங்கை தமிழர்களில் ஆண்டொன்றுக்கு தோராயமாக, 750 மாணவர்கள் அரசு மற்றும் பிற கல்லூரிகளில் கலை, அறிவியல் மற்றும் பட்டயம் உள்ளிட்ட தொழிற்படிப்புகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படக்கூடிய கல்வி உதவித்தொகை போதுமானதாக இல்லை என அறியப்பட்டுள்ளது.  இவர்களுக்கு பாலிடெக்னிக் படிப்பிற்கு ரூ.2,500, இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கு ரூ.3,000, இளநிலை தொழில்சார்ந்த படிப்புகளுக்கு ரூ.5,000 கல்வி உதவித்தொகையாக ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. இனி, இதை உயர்த்தி, பாலிடெக்னிக் படிப்பிற்கு ரூ.10 ஆயிரம், இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பிற்கு ரூ.12 ஆயிரம், இளநிலை தொழில்சார்ந்த படிப்புகளுக்கு ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ரூ.1 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

 முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், அவர்கள் தங்களது வேலைவாய்ப்பு தகுதியினை உயர்த்தி கொள்ளவும், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ஐந்தாயிரம் முகாம் வாழ் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 300 சுயஉதவி குழுக்களுக்கு சுழல் நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதியாக, ஒவ்வொரு சுயஉதவிக்குழுவுக்கும் தலா ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 321 சுயஉதவி குழுக்களுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட 50 ஆயிரம் ரூபாயுடன், மேலும் 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக  நடப்பு நிதி ஆண்டில்  ரூ.6 கோடியே 16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மாதந்தோறும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காக பணக்கொடை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது, குடும்ப தலைவருக்கு ஆயிரம் ரூபாயும், இதர பெரியவர்களுக்கு 750 ரூபாயும், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 400 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணக்கொடை, கடந்த பத்தாண்டு காலமாக உயர்த்தப்படாத நிலையில், இனி குடும்பத் தலைவருக்கு மாதந்தோறும் ரூ.1,500, இதர பெரியவர்களுக்கு ரூ.1,000 மற்றும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசிற்கு ஆண்டொன்றுக்கு கூடுதலாக ரூ.21 கோடியே 49 லட்சம் செலவாகும்.

 ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு இணைப்பு மற்றும் இலவச அடுப்பு வழங்கப்படும். இதற்காக அரசிற்கு ஒருமுறை ரூ.7 கோடி செலவினம் ஏற்படும். அதை தவிர, குடும்பத்திற்கு 5 எரிவாயு உருளைக்கு தலா ரூ.400 வீதம் மானிய தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.3 கோடியே 80 லட்சம் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படும். தற்போது 20 கிலோவிற்கு மேல் வழங்கப்படும் அரிசிக்கு, கிலோ ஒன்றிற்கு 57 பைசா வீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதனை இனி ரத்து செய்து, அவர்கள் பெறும் முழு அரிசி அளவும் விலையில்லாமல் வழங்கப்படும்.  இதற்கான செலவு தொகையான ரூ.19 லட்சத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.  

கோ-ஆப்டெக்ஸ் மூலம் ஒவ்வோர் ஆண்டும் இலவச ஆடைகளும், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இலவச போர்வைகளும் வழங்கக்கூடிய திட்டத்தில் ஒன்றிய அரசு நிர்ணயித்த விலையில் ஆடைகள் வாங்கி வழங்க இயலாத நிலையில், நடப்பு ஆண்டிற்கு பெறப்பட்ட விலைப்புள்ளிகளின் அடிப்படையில் குடும்பம் ஒன்றிற்கு 1,790 ரூபாயில் இருந்து, குடும்பம் ஒன்றுக்கு, 3,473 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக அரசிற்கு ஆண்டொன்றுக்கு ரூ.3 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். தமிழ்நாட்டில் உள்ள முகாம் வாழ் இலங்கை தமிழர் நலனை பேணிட இந்த அரசு வீடு மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தலுக்கு ரூ.261 கோடியே 54 லட்சம், அவர்களது கல்வி மற்றும் வேலைவாய்ப்பினை உறுதி செய்திட ரூ.12 கோடியே 25 லட்சம் மற்றும் அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட ரூ.43 கோடியே 61 லட்சம் என மொத்தம் ரூ.317 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இங்குள்ள தமிழர்களை மட்டுமல்ல, கடல் கடந்து வாழக்கூடிய தமிழர்களையும் காக்கக் கூடிய அரசுதான் இந்த அரசு.  இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு முதல்வர் கண்டிப்பு
பேரவையில் சட்டத்துறையில் திருத்த மசோதா ஒன்றை அறிமுகம் செய்து அமைச்சர் ரகுபதி பேசினார். அப்போது அவர், திமுக மூத்த தலைவர்களை பற்றி புகழ்ந்து பேசி வந்தார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘அமைச்சர்கள் சட்ட முன்வடிவை தாக்கல் செய்யும்போது அவற்றை நேரடியாக தாக்கல் செய்து விட வேண்டும். அதற்கு முன்னதாக தலைவர்களை பற்றி பேச வேண்டியதில்லை. மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு பதில் அளித்து பேசும்போது மட்டும் தங்களை ஆளாக்கிய தலைவர்களுக்கு நன்றி கூறி பேசலாம். கேள்வி நேரத்தின்போதும், சட்ட முன்வடிவுகள் தாக்கல் செய்யும் போதும் அதுபோன்று பேசக்கூடாது என்று அமைச்சர்களுக்கும், திமுக உறுப்பினர்களுக்கும் கண்டிப்பான வேண்டுகோளை விடுக்கிறேன். இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்’’ என்றார்.

Tags : Tamils ,Chief Minister ,MK Stalin , Home, Education, Life, Sri Lankan Tamils, Chief Minister MK Stalin
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!