×

அவதூறு வழக்கு ரத்துகோரி ஓபிஎஸ், இபிஎஸ் மனு

சென்னை: அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி, தன்னை கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சென்னை எம்.பி., எம்.எல்.ஏ., மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்  ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித் தனியே மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.   அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சி.திருமாறன் ஆஜராகினர்.

மூத்த வக்கீல் விஜய நாராயண் வாதிடும்போது, கட்சியின் கொள்கைகளுக்கு எதிராகவும், களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும் நடந்து கொண்டதால் நீக்கப்பட்டார்.  ஒருவர் நீக்கப்பட்டால் அதனை கட்சியின் உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயம். கட்சிகாரர்களுக்கான அறிக்கைதான் என்பதால், அவதூறு ஆகாது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றார். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, புகாரில் அவதூறுக்கான எந்த சாராம்சமும் இல்லை. அரசியல் கட்சியின் உறுப்பினர் கட்சியின் விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற விதியை மீறியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கட்சியில் இருந்து நீக்கவும் கட்சிக்கு முழு அதிகாரம் உள்ளது. புகழேந்தி 2017ல் வெளியேற்றியபோதும் இதே வாரத்தைகளை பயன்படுத்தி தான் அறிக்கை வெளியிடப்பட்டது.  இதற்காக அவதூறு வழக்கு  தொடர்வது இதுவே முதல்முறையாக உள்ளது என்றார்.
 புகார்தாரர் புகழேந்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்வதாகவும், தடை விதிக்க வேண்டியதற்கான அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

 அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,  வழக்கு குறித்து பதிலளிக்குமாறு புகழாந்திக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தார். சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிப்பது குறித்து அன்றைய தினம் முடிவெடுக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.


Tags : EPS , Defamation case, OBS, EPS, petition
× RELATED சொல்லிட்டாங்க…