மேகதாது அணை விவகாரம் கர்நாடகாவின் திட்ட அறிக்கையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு

புதுடெல்லி: மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் செயல் திட்ட அறிக்கையை ரத்து செய்து, அதை அந்த மாநில அரசுக்கே திருப்பி அனுப்பும்படி ஒன்றிய நீர்வளத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டம், கனகபுரா தாலுகா, மேகதாது என்ற பகுதியில் ரூ.9 ஆயிரம் கோடியில் புதிய தடுப்பணையை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்தினால், கர்நாடகாவில் எவ்வளவு மழை பெய்தாலும் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது. இந்நிலையில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி சட்டபேரவையில் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றினார். அது, ஒன்றிய  நீர்வள அமைச்சகத்திலும் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் டெல்லி வந்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மேகதாது திட்டத்துக்கு அனுமதி வழங்கும்படி கோரினார். இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குமணன், உமாபதி ஆகியோர் நேற்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில், ‘காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு வழங்கிய செயல் திட்ட அறிக்கையை ரத்து செய்து, அதனை அம்மாநில அரசிடமே திருப்பி அனுப்பும்டி ஒன்றிய நீர்வளத் துறைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், மேகதாது அணை தொடர்பாக எதிர்காலத்தில் கர்நாடகா அரசு ஏதாவது அறிக்கை  சமர்பித்தாலும் கூட, அதனை பரிசீலனை செய்யாமல் எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. மேகதாது அணை தொடர்பான பிரதான வழக்குடன் இந்த மனுவும் விரைவில் சேர்த்து விசாரிக்கப்படும் என தெரிகிறது.

Related Stories:

More
>