×

காபூல் விமான நிலையம் அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் பலி எண்ணிக்கை 110 ஆக உயர்வு: ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை  பிடித்த பிறகு நாட்டைவிட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிகின்றனர். அவர்களை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவ விமானங்கள் அழைத்து செல்கின்றன. இந்நிலையில், காபூல் விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் 2 இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஆப்கானிஸ்தான் மக்கள் 60 பேர், வெளிநாட்டினர், 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 110 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருப்பதால், இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் தங்களின் மீட்பு பணிகளை நேற்றுடன் முடித்து கொள்வதாக அறிவித்தன.  இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாகி கூறுகையில், ``ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அங்கு மாறி வரும் சூழலை இந்தியா உன்னிப்பாக கவனிக்கிறது. ஆப்கனில் நிச்சயமற்றத்தன்மை நிலவுகிறது. தற்போதைய சூழலில் அங்கிருப்பவர்களின் பாதுகாப்பே முக்கியம். காபூலுக்கு மீட்பு விமானங்களை அனுப்புவது குறித்து பல்வேறு தரப்பினர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது,’’ என்றார்.

இந்நிலையில், காபூலில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். விமான நிலையத்தில் மீட்புப் பணியில் உள்ள அமெரிக்க வீரர்களை குறிவைத்தே இந்த தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
24 மணி நேரத்தில் 89 விமானங்களில் 12,500 பேர் மீட்பு மனித வெடிகுண்டு தாக்குதலில் 13 வீரர்களை இழந்த போதிலும், நேற்றும் ஆப்கானிஸ்தான் மக்களை வெளியேற்றும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டது. தாக்குதலுக்குப் பிறகு கடந்த 24 மணி நேரத்தில் 12,500 பேரை 89 விமானங்கள் மூலம் அது மீட்டது. இவற்றில் 35 அமெரிக்க ராணுவ விமானங்கள். மற்ற 54 விமானங்கள் நட்பு நாடுகளை சேர்ந்தவை.  இந்த மாதம் 14ம்  தேதி முதல் இதுவரையில் ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தேடி வேட்டையாடுவோம் அதிபர் பைடன் ஆவேசம்
காபூல்  தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பைடன் நேற்று  அளித்த பேட்டியில், ``காபூல் குண்டுவெடிப்பை மறக்க மாட்டோம், மன்னிக்கவும்  மாட்டோம். இதற்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும். அவர்களை தேடி  சென்று வேட்டையாடுவோம். இந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்  தீவிரவாதிகளே காரணம். அவர்களின் ஆயுதங்கள், கிடங்குகள், முகாம்கள்,  தலைவர்களை அழிக்க திட்டமிடும்படி உத்தரவிட்டு உள்ளேன். ஆப்கானிஸ்தானில்  இருந்து அமெரிக்கர்கள், நட்பு நாடுகளை சேர்ந்தவர்களை மீட்கும் பணி தொடரும்.  ஆப்கான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் இறந்ததற்கு பொறுப்பேற்கிறேன்,’’ என்றார். அமெரிக்க வீரர்களின் பலிக்கு பொறுப்பேற்பதாக கூறியபோது, பைடன் சிறிது நேரம் தலைகுனிந்து, குரல் தழுதழுக்க சிறிது நேரம் அப்படியே நின்றார். இந்த காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Tags : IS ,Kabul airport , Human bombing near Kabul airport Death toll rises to 110: IS militant group responsible
× RELATED இது உங்கள் ராம ராஜ்ஜியம்: ஆம் ஆத்மி இணையதளம் தொடக்கம்