×

14 லட்சம் கையாடல் செய்த விவகாரம் வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்: ஆணையர் அதிரடி உத்தரவு

சென்னை: 14 லட்சம் கையாடல் செய்த விவகாரத்தில் வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலரை சஸ்பெண்ட் செய்து ஆணையர் குமரகுருபரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோயிலில் முதல் நிலை செயல் அலுவலராக சிந்துமதி என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர், தற்காலிக ஊழியர் ஒருவரின் பெயரில் காசோலை எடுத்து, கோயில் நிதியில் இருந்து முறைகேடாக பணம் எடுத்து செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், ஆணையரின் அனுமதி இல்லாமல் கோயில் வருமானத்தில் கார் ஒன்றை வாங்கியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தது.

இது தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவின் பேரில், மண்டல தணிக்கை அலுவலர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் கடந்த 5 நாட்களாக ஆய்வு செய்தனர். இதில், கோயில் நிதியை தற்காலிக ஊழியரின் காசோலை வாயிலாக 14 லட்சம் வரை கையாடல் செய்து இருப்பது அம்பலமானது. இதற்கான செலவை பலவகை ரசீதுகளில் பதிவு செய்து இருப்பதாகவும் தெரிந்தது. மேலும், கோயில் நிதியில் தேவையற்ற செலவுகள் செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இந்த குழு சார்பில் அறிக்கை தயார் செய்து ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்பேரில் முதல்நிலை செயல் அலுவலர் சிந்துமதியை சஸ்பெண்ட் செய்து ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவருக்கு பதிலாக சென்னையில் உள்ள மிண்ட் ஏகாம்பரேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் நற்சோனையிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் முதல் நிலை செயல் அலுவலர் சிந்துமதி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை உள்ள வரவு செலவு விவரங்களை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதில், கோடிக்கணக்கில் அவர் கோயில் நிதியை முறைகேடாக செலவு செய்து இருப்பதும் தெரிய வந்து இருப்பதாக அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏற்கனவே, செயல் அலுவலர் சிந்துமதி மற்றுமொரு குற்றச்சாட்டின் மீது சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Vallakottai Murugan ,temple , 14 lakh handled affair Vallakottai Murugan Temple Executive Officer Suspended: Commissioner of Action Order
× RELATED திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார்...