×

பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் அரையிறுதியில் பவினா: பதக்கம் உறுதிசெய்து சாதனை

டோக்கியோ: பாரா ஒலிம்பிக் போட்டியின் மகளிர் டேபிள் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறிய  இந்திய வீராங்கனை  பவினாபென் படேல், பதக்கம் வெல்வதை உறுதி செய்து சாதனை படைத்துள்ளார்.பாரா ஒலிம்பிக் போட்டியில்  பங்கேற்றுள்ள  இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில், டேபிள் டென்னிஸ்  மகளிர் ஒற்றையர்  பிரிவின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற பவினா நம்பிக்கை  அளித்தார். தொடர்ந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கும் தகுதி பெற்றார்.  நேற்று காலை நடந்த அந்த போட்டியில்  பிரேசில் வீராங்கனை ஜாய்ஸ் ஒலிவேராவை  எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடிய பவினா  12-10, 13-11 என்ற புள்ளி கணக்கில்  முதல் 2 செட்களை போராடி வென்றார். ஆனால் 3வது செட்டை 11-6 என எளிதில் வசப்படுத்தினார்.

அதனால் 23 நிமிடங்களில் 3-0 என நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு  முன்னேறினார். தொடர்ந்து மாலையில் நடந்த காலிறுதியில்  செர்பியா வீராங்கனை  பெரிக் ரன்கோவிக் உடன் மோதினார்.   அதிகம் அலட்டிக் கொள்ளாமல்  11-5, 11-6, 11-7 என தொடர்ச்சியாக 3 செட்களையும் கைப்பற்றினார். அதனால் 18 நிமிடங்களில் 3-0 என நேர் செட்களில் வென்று  அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால், குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் வெல்வதை அவர் உறுதி செய்துள்ளார். டோக்கியோ பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிசில் 3வது இடத்துக்கான பிளே ஆப் போட்டி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.  அரையிறுதியில் தோற்கும் 2 வீராங்கனைகளுக்குமே வெண்கலப் பதக்கம் கிடைக்கும். பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிசில் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையும் பவினாவுக்கு கிடைத்துள்ளது. இன்று காலை  நடைபெறும் அரையிறுதியில்   சீன வீராங்கனை மியோ ஜாங்க் உடன் பவினா மோத உள்ளார்.

Tags : Pavina ,Paralympic , Pavina in Paralympic table tennis semifinals: Medal confirmation record
× RELATED மாற்றுத்திறனாளிகள் வாள்வீச்சு...