×

தேசிய கோகுல் இயக்கத்தால் விவசாயிகள் வருவாய் உயரும்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தகவல்

புதுடெல்லி: ‘தேசிய  கோகுல் இயக்கத்தின் மூலம், விவசாயிகளின் வருமானம் உயரும்,’ என்று ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். நாட்டின் விடுதலை அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, ஒன்றிய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை  துறையின் சார்பில் நாடு முழுவதும் தொழில் முனைதல் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பொதுச் சேவை மையங்களின் மூலமாக நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் 2 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டன.அப்போது, தொழில் முனைதல் திட்டங்கள் குறித்தும், அவற்றுக்கு இணையதளங்கள் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளிடம் உரையாற்றிய ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, ‘‘சமீபத்தில் ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தேசிய கால்நடை இயக்கம் மற்றும் தேசிய கோகுல் இயக்கம் ஆகியவற்றில் வளர்ப்பு பண்ணை தொழில் முனைவோர் மற்றும் தீவன தொழில் முனைவோருக்கான திட்டங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. ஊரக தொழில் முனைதலை உருவாக்கி, வேலையில்லாத இளைஞர்களுக்கும், மாடு, பால், கோழி, ஆடு, பன்றி மற்றும் தீவன துறைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு வாய்ப்புகளை வழங்கியும், தற்சார்பு இந்தியாவுக்கு வழிவகுப்பதில் தேசிய கால்நடை இயக்கம் உதவும்,’’ என்றார். நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் இணை அமைச்சர் எல். முருகன், ‘‘விடுதலையின் அம்ரித் மகோத்சவம் இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. தேசிய கோகுல் இயக்கம் அதிக உற்பத்திக்கு உதவுவத மட்டுமின்றி, விவசாயிகளின் வருமானத்தையும் உயர்த்தும்,’’ என்றார்.

Tags : National Gokul Movement ,Union ,L. Murugan , Union Minister L. Murugan informed
× RELATED முதல்முறை வாக்காளர்கள் வேகமாக...