கோயில் யானைகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை: அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், திருக்கோயில்கள் மேம்பாடு மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அனைத்து அலுவலர்கள் ஆய்வு கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையிலும், அத்துறை ஆணையர் குமரகுருபரன் முன்னிலையிலும் நேற்று நடந்தது. பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: கோயில்களில் விரைவில் திருப்பணிகளை முடித்து குடமுழுக்கு நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகளை அதிகப்படுத்தி, தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தி பள்ளி வளாகத்தை தூய்மையாக வைக்க வேண்டும். கோயிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். பணியாளர்களுக்கு தற்போது பணிச்சுமைகள் அதிகமாக உள்ளதை நன்கு அறிவேன். விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு பணிச்சுமைகள் குறைக்கப்படும். கோயிலுக்கு வருகின்ற பக்தர்களிடம் கோயில் பணியாளர்கள் அன்போடு பணியாற்ற வேண்டும்.

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ரூ.625 கோடி மதிப்பீட்டில் மீட்கப்பட்ட கோயிலுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாப்பான முறையில் பராமரித்து வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் யானைகளுக்கு 30 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்வதை கோயில் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். விழா காலங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் யானைகளை இயற்கையான சூழ்நிலைகளில் வைத்து பராமரிக்க வேண்டும்.

Related Stories:

>