திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு இயற்கை உணவு விற்பனை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் இயற்கை வேளாண் பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட உணவு விற்பனை சோதனை ஓட்டம் தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மே மாதம் முதல் இயற்கை வேளாண்மையால் உற்பத்தி செய்யப்பட்ட அரிசி, வெல்லம், பருப்பு, முந்திரி, திராட்சை நெய் உள்ளிட்டவை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெறப்பட்டு அதில் தயார் செய்யும் பிரசாதங்கள் மூலவருக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது.

இதேபோல் பக்தர்களுக்கும் ‘சம்பிரதாய போஜனம்’ என்ற பெயரில் இயற்கை வேளாண்மை உற்பத்திப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட உணவு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி நேற்று திருமலை அன்னமய்யா பவனில் ‘சம்பிரதாய போஜனம்’ என்ற பெயரில் காலை சிற்றுண்டி, மதியம் உணவு, இரவு உணவு ஆகியவை தயார் செய்து சோதனை ஓட்ட முறையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதேபோல் வரும் 5 நாட்களுக்கு மட்டும் 500 பேருக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்த நாடு முழுவதும் உள்ள பல நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து லாப நோக்கு இல்லாமல் செய்வதாக தெரிவித்துள்ளனர். எனவே அவர்கள் மூலமாக இந்த வாரம் முழுவதும் பக்தர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் இந்த உணவுப் பொருட்கள் தயார் செய்வதற்கு எவ்வளவு செலவாகிறது என்பது குறித்து திட்டமிட்டு பின்னர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இயற்கை வேளாண்மை உற்பத்தி மூலம் வரக்கூடிய உணவு தானியங்களை கொண்டு தயார் செய்யும் உணவுகளை உட்கொள்வதால் ஆரோக்கியமாக இருப்பதோடு நம் பாரம்பரிய உணவு கலாசாரத்தை மீண்டும் கொண்டு வர முடியும். இதை செயல்படுத்தும் தேவஸ்தானத்திற்கு இயற்கை வேளாண் உற்பத்தி விவசாய சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>