×

ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தாலிபான்களுக்கு தொடர்பில்லை என்பது நாடகம் :வெடிகுண்டு தாக்குதலை தாலிபான் கண்டித்தது குறித்து இடைக்கால அதிபர் கருத்து!!

காபூல் : ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தாலிபான்களுக்கு தொடர்பு இல்லை என்று கூறுவது ஒரு நாடகம் என்று ஆப்கன் இடைக்கால அதிபர் அம்ருல்லா சலே கூறியுள்ளார்.காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பிறகு ஆப்கானை கைப்பற்றிய தாலிபான்  மற்றும் பாகிஸ்தான் அரசு ஆகியன கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு தீவிரவாத அமைப்பின் மீது மற்றொரு தீவிரவாத அமைப்பு பழிபோடும் விளையாட்டை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. காபூல் குண்டுவெடிப்புக்கு காரணம் தலிபான்களா?,  ஐஎஸ்ஐஎஸ்-கே தீவிரவாத அமைப்பா? என்ற கேள்விகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் வானொலிக்கு பேட்டியளித்த தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா  முஜாஹித், ‘எங்களது படையினர் தங்கியிருக்கும் இடத்திலும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. எங்களது குழுவினர் தங்கள் உயிரைப்  பணயம் வைத்து காபூல் விமான நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கும்  ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பால் ஆபத்து உள்ளது’ என்று கூறினார்.

இந்த நிலையில், முந்தைய அதிபர் அஷ்ரப் கனி, வெளிநாடு தப்பிச் சென்ற பிறகு தம்மை அதிபராக அறிவித்துக் கொண்ட அம்ருல்லா சலே, தாலிபான் அமைப்பினரை கடுமையாக சாடியுள்ளார். தாலிபான்களுடன் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் கூறுவது போன்று ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு இல்லை என்று தாலிபான்கள் கூறுவதாக ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். ஐஎஸ் தீவிரவாதிகளின் மூலமே தாலிபான் தான் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக இடைக்கால அதிபர் அம்ருல்லா சலே தெரிவித்துள்ளார்.தாலிபான்கள் காபூலை கைப்பற்றியபோதே அம்ருல்லா சலே தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டு ஆப்கனிலேயே பதுங்கி இருக்கிறார்.


Tags : Taliban ,IS , தாலிபான்
× RELATED உ.பி பாஜக அரசை தலிபான் அரசு என்று கூறிய...