அரசு மருத்துவமனை முன் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பஸ் ஸ்டாப் மாற்றம்-காவல்துறை அதிரடி திட்டம்

தர்மபுரி : தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் விபத்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பஸ் நிறுத்தங்கள் மாற்றி அமைக்க, காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.தர்மபுரி- சேலம் மெயின்ரோட்டில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனைக்கு தர்மபுரி மாவட்டமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்து, தினசரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். அரசு மருத்துவமனை முன்பு சந்திப்பு சாலை உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்தை தவிர்க்கவும், தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி, தர்மபுரி எஸ்பி கலைச்செல்வன் ஆகியோர் உத்தரவின் பேரில் நேற்று தர்மபுரி டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் நகராட்சி ஆணையர் சித்ரா, தாசில்தார் ராஜராஜன், நகராட்சி பொறியாளர் (பொ) சரவனபாபு, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் சிவகுமார், ஆர்எம்ஒ காந்தி, ஏஆர்எம்ஒ சந்திரசேகர், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் எஸ்ஐகள் சின்னசாமி, அண்ணாதுரை மற்றும் அரசு அலுவலர்கள் நேற்று போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

தர்மபுரி அரசு மருத்துவமனை முன் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கீடு செய்ய இடங்களை ஆய்வு செய்தனர். புதிய பயணிகள் நிழல்கூடம் அமைக்கப்பட்ட இடத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல நடவடிக்கை எடுப்பது குறித்து நேரில் ஆய்வு செய்தனர். நோயாளிகளின் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி, ஆட்டோ வசதி நிறுத்தவும் ஆலோசிக்கப்பட்டது. ஆவின் நிர்வாகத்திற்கு புதிய கடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள 2 கேண்டின், 2 டீக்கடைகளில் உரிய ஆவணங்கள் உள்ளதா என விசாரித்தனர். உரிய ஆவணங்கள் இருந்தால், தாசில்தாரை நேரில் சந்திக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லை என்றால், கேண்டின், டீக்கடைகளை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.

இதுகுறித்து டிஎஸ்பி அண்ணாதுரை கூறுகையில், தர்மபுரி- சேலம் மார்க்கத்தில் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கான பஸ் ஸ்டாப் ராமாபோர்டிங் அருகே உள்ளது. அந்த பஸ் ஸ்டாப்பை அரசு மருத்துவமனை எதிரே அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம்- தர்மபுரி நோக்கி வரும் பஸ்கள், அரசு மருத்துவமனை முன்பு புதியதாக அமைக்கப்பட்ட பயணிகள் நிழல்கூடம் முன்பு நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தை தடுக்க அரசு மருத்துவமனை முன் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்ட இடத்தில் தான் வாகனங்கள் நிறுத்த வேண்டும். வாகன திருட்டை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்தப்படுகிறது என்றார்.

Related Stories:

>