×

சூளகிரி அருகே தமிழ் கல்வெட்டுடன் கூடிய 300 ஆண்டு பழமையான கல் உரல் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உலகம் கிராமத்தில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில், 3 கி.மீ., தொலைவில், இலகம்பதி என்ற இடம் உள்ளது. அவ்விடத்தை கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.இது குறித்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: மண்மேடாக உள்ள இக்கோயில், 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இருக்கலாம்.

அந்த இடத்தினை ஆய்வு செய்த போது, பூதேவி சிலை ஒன்று பாதி மண்ணில் புதைந்திருந்தது. இந்த சிலை, 500 ஆண்டு பழமையானது. அந்த இடத்தினை சுத்தம் செய்தபோது எண்ணெய் ஆட்டும் பெரிய கல் உரல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ் கல்வெட்டும் உள்ளன. இதில் உள்ள எழுத்துக்கள் படியெடுக்கப்பட்டது. அதில், அக்காலத்தில் எண்ணெய் ஆட்ட இயந்திரங்கள் கிடையாது. இது போன்ற உரல் செக்கில் மாடுகள் கட்டியே எண்ணெய் எடுத்தார்கள். இந்த உரலின் கிழக்குபக்கத்தில் 8 வரிகளை கொண்ட தமிழ் கல்வெட்டு உள்ளது. இது 250 முதல் 300 ஆண்டுகள் பழமையானதாகும்.

இந்த செக்கு உரல் பார்த்தீப ஆண்டில், ஆடி மாதம் மூன்றாம் தேதி இலம்பாதன் என்பவருக்காக செய்து தானமாக அளித்த செய்தியை கூறுகிறது. இந்த பகுதி இன்றும் இலக்கம்பதி என்று அழைக்கப்படுவதாக ஊர் பெரியோர் தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வில் வரலாற்று ஆய்வாளர்கள் சதாநந்த கிருஷ்ணகுமார், சரவணகுமார், தமிழ்செல்வன், பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Choolagiri , Krishnagiri: Krishnagiri district near Choolagiri on the road from Ulagam village to Rayakottai, 3 km away, at Ilakambathi.
× RELATED ஆவணங்களின்றி கொண்டு சென்ற ₹1.35 லட்சம் பறிமுதல்