காதலியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வழக்கு வாலிபருக்கு 10 ஆண்டு சிறை-கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு

கடலூர் : காதலியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வழக்கு தொடர்பாக வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.  கடலூர் பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ் மகன் மணிகண்டன் (29). கடலூரில் ஒரு கடையில் வேலை பார்த்து வரும் அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 18.4.2018 அன்று மணிகண்டன், அந்த பெண்ணை வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார்.

அப்போது மணிகண்டன், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த நிலையில் இளம்பெண் கர்ப்பம் ஆனார். இதையடுத்து திருமணம் செய்து கொள்ளும்படி இளம்பெண் கூறியுள்ளார். ஆனால் கருக்கலைப்பு செய்து காலம் கடத்தி வந்த நிலையில், 16.6.2018 அன்று இளம்பெண், மணிகண்டனிடம் சென்று தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.

 அதற்கு வேறொரு இடத்தில் பெண்ணை பார்த்து திருமணம் செய்யும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுள்ளதாக மணிகண்டன் கூறியதால் மனமுடைந்த இளம்பெண், வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய இளம்பெண், இதுகுறித்து கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கின் மீதான விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இறுதி கட்ட விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நீதிபதி பாலகிருஷ்ணன் மணிகண்டனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் அபராத தொகையில் ரூ.40 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் செல்வபிரியா ஆஜரானார்.

Related Stories:

>