தமிழக கடலோர ரோந்து பணிக்கு 20 நவீன படகுகள்-ஏடிஜிபி சந்தீப் மிட்டல் தகவல்

ராமேஸ்வரம் : தமிழக கடலோர ரோந்து பணிக்கு 20 நவீன படகுகள் விரைவில் வர உள்ளதாக கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபி சந்தீப் மிட்டல் தெரிவித்தார்.ராமேஸ்வரம் ஒலைக்குடா கிராமம் நரிக்குழி லைட்ஹவுஸ் பகுதியில் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு சொந்தமான கடற்கரை வளாகத்தில் நேற்று 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபி சந்தீப் மிட்டல் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் கடலோர பாதுகாப்பு குழும துணை இயக்குனர் சின்னச்சாமி, ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ்கிருஷ்ணன், ராமேஸ்வரம் ஆய்வாளர் கனகராஜ் உட்பட போலீசார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

பின்னர் ஏடிஜிபி சந்தீப் மிட்டல் கூறுகையில், ‘‘கடலோர பாதுகாப்பில் மீனவர்களின் பங்களிப்பு முக்கியமானது. அவர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி தேவையான தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது, ஏதாவது உதவிகள் தேவையென்றால் உடனடியாக மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். தமிழக கடலோர பகுதியில் பாதுகாப்பு நன்றாக உள்ளது. கடலோர பாதுகாப்பு பணிக்கு மேலும் 20 நவீன ரோந்து படகுகள் விரைவில் வரவுள்ளது. இதன் மூலம் ரோந்து பணிகள் விரிவுபடுத்தப்படும்’’ என்றார்.

Related Stories: