கர்நாடக வியாபாரிகள் வராததால் புஞ்சை புளியம்பட்டி சந்தையில் விதை வெங்காயம் விலை வீழ்ச்சி

சத்தியமங்கலம் :  கர்நாடக மாநிலத்தில் இருந்து புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வராததால் விதை வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்தது.

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள வாரச்சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது சந்தையாக விளங்கும் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சின்ன வெங்காயம் மற்றும் விதை வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

விதை வெங்காயத்தை வாங்க தாளவாடி மலைப்பகுதி மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால், சாம்ராஜ்நகர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு 1000 மூட்டை விதை வெங்காயத்தை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சந்தைக்கு வரவில்லை. கடந்த இரண்டு வாரங்களாக கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்ற விதை வெங்காயம் நேற்று விலை குறைந்து கிலோ ரூ.30 முதல் ரூ.40  வரை விற்பனையானது.

வழக்கமாக சந்தைக்கு கொண்டு வரப்படும் வெங்காய மூட்டைகள் அனைத்தும் விற்பனையாகும் நிலையில் நேற்று சந்தைக்கு கர்நாடக மாநில வியாபாரிகள் விவசாயிகள் வராததால் 500 விதை வெங்காய மூட்டைகள் மட்டுமே விற்பனையானது. ஐப்பசி மாதத்தில் தான் விவசாயிகள் அதிகளவில் சின்ன வெங்காயம் நடவு செய்வர். அதனால், விதை வெங்காய விலை குறைந்துள்ளதாகவும், கர்நாடக வியாபாரிகள் வராததால் சுமார் 500க்கும் மேற்பட்ட விதை வெங்காய மூட்டைகள் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்து பாதிக்கப்பட்டதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>