×

தனது ஈட்டியை பாகிஸ்தான் வீரர் பயன்படுத்தியதை வைத்து தேவையில்லாத சர்ச்சையை கிளப்ப வேண்டாம் : நீரஜ் சோப்ரா வேண்டுகோள்!!

டெல்லி : இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின் ஈட்டியை பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் வைத்திருந்தது தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ளன. தனது ஈட்டியை பாகிஸ்தான் வீரர் பயன்படுத்தியதை வைத்து தேவையில்லாத சர்ச்சையை கிளப்ப வேண்டாம் என்று நீரஜ் சோப்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.நீரஜ் சோப்ரா சில தினங்களுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டியில், இறுதி சுற்றில் ஈட்டி எறிய தயாராகி கொண்டு இருந்த போது, திடீரென தமது ஈட்டியை பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் எடுத்துச் சென்றதை பார்த்ததாக கூறியுள்ளார்.

அவரிடம் தமது ஈட்டியை கேட்டு வாங்கி பிறகு முதல் வாய்ப்பில் தான் கொஞ்சம் அவசர கதியில் ஈட்டி எறிந்ததை அனைவரும் பார்த்ததாக பேட்டியில் நீரஜ் சோப்ரா குறிப்பிட்டார்.இதன் பிறகு பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகின.இந்திய வீரரின் கவனத்தை திசை திருப்பவே பாகிஸ்தான் வீரர் உள்நோக்கத்துடன் நடந்து கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன.இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் மீதான விமர்சனங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நீரஜ் சோப்ரா, தவறான பிரச்சாரத்திற்காக தயவு செய்து பேட்டியை பயன்படுத்த வேண்டாம் என்று ட்விட்டர் பதிவு மூலம் கேட்டுக் கொண்டார்.

விளையாட்டு ஒற்றுமையை கற்றுக் கொடுக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், தனது பேட்டியை மையமாக வைத்து சிலரிடம் இருந்து வரும் கருத்துக்கள் மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ளார்.டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை கைப்பற்றி சரித்திரம் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Neeraj Chopra , நீரஜ் சோப்ரா
× RELATED ஈட்டி எறிதலில் தங்கம், வெள்ளி