×

நிலத்தை அளவீடு செய்யக்கோரி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்-அதிகாரிகள் சமரசம்

வாணியம்பாடி : நிலத்தை அளவீடு செய்யக்கோரி வாணியாம்பாடி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். வாணியம்பாடி அடுத்த கலந்திரா  பகுதியை சேர்ந்தவர் ஜோதி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ரீட்டா, ரோசி என்ற 2 மகள்கள் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் என்ற மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜோதி, லட்சுமி ஆகியோர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர்.

இதனால், ரீட்டா, ரோசி மற்றும் சுபாஷ் சந்திரபோஸை அவர்களது உறவினர்களிடம் வளர்த்து வருகின்றனர்.மேலும், ரீட்டா, ரோசி, சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால், ரீட்டா, ரோசி, சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அவர்களது உறவினர்கள் நிலத்தை அளவீடு செய்யக்கோரி வாணியம்பாடி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது வருவாய் துறை அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்து அனைவருக்கும் பிரித்து தருவதாக உறுதியளித்தனர். இதனையேற்று அவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Dharna ,Dasildar , Vaniyambadi: Dharna protesters besieged the Vaniyambadi Dasildar's office demanding land survey.
× RELATED தேர்தல் பறக்கும் படை சோதனை:...