தமிழக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் 17வது ஆளுநராக பதவியேற்பு!!

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் 17வது ஆளுநராக இல.கணேசன் பதவியேற்றுக்கொண்டார். மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆளுநர் பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சண்முகநாதன், மேகாலயா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.பின்னர் 2019-ல் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார் தமிழிசை சவுந்தரராஜன்.

அந்த வரிசையில் பாஜக மூத்த தலைவராக இருந்த இல.கணேசனை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டார். மணிப்பூர் மாநில கவர்னராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம் கடந்த 10-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, இன்று மணிப்பூர் ஆளுநராக இல. கணேசன் பதவியேற்றுக்கொண்டார். மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி. சஞ்சய் குமார் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

கடந்த 7 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர் ஆளுநராக நியமிக்கப்படுவது இது 3-வது முறையாகும். தஞ்சாவூரில் 1945-ம் ஆண்டு பிறந்த இல.கணேசன், சிறுவயதிலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்தார். 1991-ல் பாரதிய ஜனதா கட்சியின் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டார். அன்று முதல் கடந்த 30 ஆண்டுகளாக அவர், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். ஆளுநராக நியமிக்கப்பட்டதால் தற்போது அப்பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.2009, 2014 லோக்சபா தேர்தல்களில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். பின்னர் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக்கப்பட்டார்.

Related Stories:

>