காபூலில் 4 இடங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் : அப்பாவி மக்களை கொல்வதை ஏற்க முடியாது என தாலிபான்கள் கண்டனம்!!

காபூல் : ஆப்கன் தலைநகர் காபூலில் ஐஎஸ் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய 4 வெடிகுண்டு தாக்குதல்களில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 90 பேர் கொல்லப்பட்டனர்.150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.ஆப்கானிஸ்தான் தாலிபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்ட நிலையில், ஆயிரக்கணக்காண மக்கள் வெளிநாடு தப்பிச் செல்ல தலைநகர் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.இந்த நிலையில், நேற்று மாலை விமான நிலையத்திற்கு வெளியே அபேகேட் பகுதியில் மக்கள் கூட்டத்திற்கு இடையே சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.

அடுத்த சில நிமிடங்களில் விமான நிலையத்திற்கு அருகே வெளிநாட்டினர் தங்கியுள்ள விடுதி அருகில் மற்றொரு வெடிகுண்டு வெடித்தது.இந்த 2 வெடிகுண்டுகளும் மனித வெடிகுண்டு தாக்குதல் என தெரியவந்துள்ளது. விமான நிலையத்திற்குள் செல்வதற்கான கழிவுநீரில் இறங்கி காத்திருந்த ஏராளமான மக்கள் இந்த வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டனர்.பாதுகாப்புப் பணியில் இருந்த 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இதனிடையே அடுத்த சில மணி நேரங்களில் மேலும் 2 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் ஒன்றில் தாலிபான் படையினரின் வாகனத்தை குறிவைத்து தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தொடர் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, 160 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்து மனித வெடிகுண்டாக மாறியவரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. இதனிடையே தாலிபான்கள் கைக்கு நாடு சென்ற பின், நடந்த இந்த முதல் தீவிரவாத தாக்குதலுக்கு தாலிபான் தீவிரவாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு படைகள் காபூலில் முகாமிட்டதன் காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இது குறித்து தாலிபான் அதிகாரி அப்துல் கஹார் பால்கி கூறுகையில், இந்த தாக்குதலை கண்டிக்கிறோம். முழுமையான விவரங்கள் என்னிடம் இல்லை.ஆனால் அப்பாவி பொதுமக்களை குறிவைப்பது பயங்கரவாத செயலாகும். இது உலகம் முழுவதும் கண்டிக்கப்பட வேண்டும்,என்றார்.  

Related Stories:

>