சட்டப்பேரவையில் வெளிநடப்பு ஏன்?... எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: வெளிநடப்பு செய்த பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: சட்டசபையில் பள்ளிக்கல்வித் துறை, உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்போது அதிமுக சார்பில் கே.பி.அன்பழகன் பேசினார். ஜெயலலிதா பெயரில் அதிமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்தில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அதை தொடர வேண்டும் என்று அரசுக்கு அவர் கோரிக்கை வைத்தார். ஆனால் ஜெயலலிதா பெயரில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கூறினார். இதை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளோம். தமிழக முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து கல்வியில் புரட்சி, மறுமலர்ச்சியை கொண்டு வந்தவர் ஜெயலலிதா.

கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். தமிழகத்தில் பள்ளிகளை தரம் உயர்த்தி, கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியவர் ஜெயலலிதா. அதன் மூலம்தான் உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம், இந்தியாவிலேயே முதலிடம் பிடித்தது. அப்படிப்பட்டவருக்கு புகழ் சேர்க்கும் விதமாகத்தான் விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை தொடங்கினோம். அதற்கு கவர்னரும் அனுமதி அளித்திருந்தார். அதற்கு துணை வேந்தர் மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஆனால் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால், அந்த பல்கலைக்கழகத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத சூழ்நிலையில் புதிய அரசு பொறுப்பேற்றது. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசை வலியுறுத்தினோம். ஆனால் முதல்வர் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் அது தொடராது என்றும் அதற்கு மாற்றாக அந்தப் பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதாக தெரிவித்தனர். அதைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More
>