×

சொத்து விற்பனையில் ஒன்றிய அரசு மும்முரம் மக்களே, உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்: ராகுல் காந்தி அறிவுரை

புதுடெல்லி: ‘ஒன்றிய அரசு சொத்துக்களை விற்பனை செய்வதில் மும்முரமாக இருந்து வருவதால், உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்,’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அரசுக்கு சொந்தமான சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு விடும் தேசிய பணமயமாக்கல் திட்டத்தை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தொடங்கி வைத்தார். விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், விளையாட்டு மைதானம், நெடுஞ்சாலை உள்ளிட்டவற்றை குத்தகைக்கு விட்டு, ரூ.6 லட்சம் கோடி  நிதி திரட்டுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

ஒன்றிய அரசின் இந்த திட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. பொதுமக்களின் கடின உழைப்பில் 70 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட சொத்தை, பாஜ தலைமையிலான அரசு 7 ஆண்டுகளில் விற்பனை செய்கிறது என 3 நாட்களுக்கு முன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். ‘இந்தியா விற்பனைக்கு’ என்ற ஹேஷ்டேக்கையும் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

இந்நிலையில், ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. அடுத்த கொரோனா அலையினால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்ப்பதற்கு தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். மக்களே... தயவு செய்து நீங்களே உங்களை கவனித்துக் கொள்ளுங்கள். ஒன்றிய அரசு சொத்துக்கள் விற்பனையில் தீவிரமாக இருக்கிறது,’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Rahul Gandhi , Property Sale, Government of India, Rahul Gandhi
× RELATED சொல்லிட்டாங்க…