கூடுதலாக இரண்டு கல்வி தொலைக்காட்சி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கொள்கை: மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அலுவலருக்கு முதல்வர் விருது; சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு

சென்னை: பள்ளி கல்வி துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பு:

* கிராமப்புற நூலகங்களில் மின் நூலகம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2.40 கோடியில் ஏற்படுத்தப்படும்.

* கன்னிமாரா நூலகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், அதன் பாரம்பரிய நிலை மாறாத வகையில் ரூ.3.20 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

* அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நலனுக்காக, ஆண்டுதோறும் பொதுமாறுதல் நடத்தப்பட்டு வருகிறது. இப்பொதுமாறுதலை ஒளிவுமறைவின்றி 2021-2022ம் கல்வியாண்டு முதல் நடத்திட பொது மாறுதல் கலந்தாய்வுக்கு கொள்கை வகுக்கப்பட்டு வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படும்.

* அனைத்து அரசு நிதி உதவி, பகுதி நிதி உதவி, சுயநிதி பள்ளிகளில் தொடக்க, ஆரம்ப, தொடர் அங்கீகாரம், பிற வாரிய பள்ளிகள்(சிபிஎஸ்இ, சிஐஎஸ், சிஇ, சிஏஐஇ, ஐபி மற்றும் பிற) சார்பான தடையின்மை சான்று அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வகையான சேவைகளை எளிமையாக்கி, இணைய வழியே ஒளிவு மறைவின்றி பெறத்தக்க வகையில் மென்பொருள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

* பள்ளி கல்வி துறையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றுகளான நன்னடத்தை சான்று, ஆளறி சான்று, தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட அனைத்து சான்றுகளும் அவர்தம் இல்லத்திற்கு அருகிலேயே அரசு பொது சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பித்து காலவிரயமின்றி பெற்று கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படும்.

* மேல்நிலை பள்ளிகளில் தொழிற்கல்வி பாடத்திட்டம் சீரமைக்கப்படும்.

* மாற்று திறனாளி மாணவர்களுக்கு வீட்டிலேயே கல்வி மற்றும் இயன்முறை மருத்துவம் வழங்கப்படும். ஒரு மாணவருக்கு ரூ.10,000 வீதம், 7786 மாணவர்களுக்கு ரூ.7.80 கோடியில் உயர் தொழில்நுட்ப உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

* இந்த கல்வியாண்டில் கூடுதலாக இரண்டு கல்வி தொலைக்காட்சி அலைவரிசைகள் உருவாக்கப்படும்.

* சிறந்த முறையில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் மாவட்ட கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது ஆண்டுதோறும் வழங்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>