×

வழிப்பறி நாடகம் ஆடி ரூ.4 கோடி தங்கம் அபேஸ்: விமான நிலைய ஊழியர்கள் 3 பேர் கைது

சென்னை: அனகாபுத்தூர், பொம்மை நகரை சேர்ந்த சரவணன் (28). சென்னை விமான நிலையத்தில், தனியார் விமான நிறுவனங்களுக்கு உணவு சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 23ம் தேதி அதிகாலை சென்னை விமான நிலையத்திலிருந்து பைக்கில் குரோம்பேட்டை நோக்கி  சென்றபோது, 3 பேர், அவரை  வழிமறித்து தாக்கி, விலையுயர்ந்த செல்போன், பைக் மற்றும் அதில் வைத்திருந்த 8 பார்சல்களையும் பறித்து சென்றனர். இதுகுறித்து, பல்லாவரம் காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார். அந்த 8 பார்சல்களில் என்ன இருந்தது என்று போலீசார் கேட்டபோது, சரவணன் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், சரவணனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், அந்த 8 பார்சல்களிலும் ரூ.4 கோடி மதிப்புடைய 9 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தது, அவை துபாயிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்டவை என்று கூறினார். மேலும், அவற்றை தனது நிறுவனத்தின் உரிமையாளர் இம்ரானிடம் ஒப்படைக்க கொண்டு சென்றபோது, வழிப்பறி நாடகம் ஆடி நண்பர்களுடன் சேர்ந்து அபகரிக்க திட்டம் போட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, சரவணனுடன் பணிபுரிந்து வந்த பள்ளிக்கரணை ஜல்லடியன்பேட்டை வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்த பிரபுராம் (37) மற்றும் சென்னை விமான நிலையத்தில் சோதனை பிரிவில் பணிபுரிந்து வரும் ஆலந்தூர் மெட்ரோ லிங்க் அவென்யூ பகுதியை சேர்ந்த முகமது நஷீத் (25) ஆகியோரை நேற்று கைது செய்து செய்தனர்.

அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், திருவல்லிக்கேணியை சேர்ந்த ஷேக் முகமது, அவரது நண்பர்கள் இஸ்மாயில், மணி ஆகியோர்தான் வழிப்பறி நாடகம் நடத்தி, சரவணனிடமிருந்து தங்க கட்டிகளை பறித்து சென்றது தெரியவந்தது. அதோடு அந்த தங்கத்தை பிரபுராமிடம்  ஒப்படைத்ததும் தெரிய வந்தது. அவரிடமிருந்து 9 கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள ஷேக், அவரது நண்பர்கள் இஸ்மாயில், மணி ஆகியோரை  தேடி வருகிறார்கள்.  இவர்களுக்கு உதவியாக செயல்பட்ட விமான நிலைய தூய்மை பணியாளர் இளையபெருமாள்,  மேலும் துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த இம்ரான் என்பவரையும் தேடி வருகின்றனர்.


Tags : Audi , Audi Rs 4 crore gold abyss: 3 airport employees arrested
× RELATED இன்சூரன்ஸ் இல்லாத ஆடி காரில் வந்து...