மூன்று பெண்கள் உட்பட உச்ச நீதிமன்றத்துக்கு 9 நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி ஒப்புதல்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்துக்கு மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9  புதிய நீதிபதிகளை நியமிக்க, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். உச்ச நீதிமன்றத்துக்கு அதிகப்பட்சமாக 34 நீதிபதிகளை நியமிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த முழு எண்ணிக்கையிலான நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கிறது. இந்த மாதத்தில் அடுத்தடுத்து மூத்த நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமனும், நவீன் சின்காவும் ஓய்வு பெற்றதால், 26 ஆக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 24 ஆக குறைந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்துக்கு புதிதாக 9 புதிய நீதிபதிகளை நியமிக்கும்படி, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் கடந்த 17ம் தேதி ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது.

கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் ஸ்ரீநிவாஸ் ஒகா, குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி, தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்தனா, கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிகுமார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி ஆகியோரின் பெயர்கள், இந்த பட்டியலில் இடம் பெற்றது. இதைத் தவிர, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து நேரடி நியமன அடிப்படையில், மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அரசு கூடுதல் வழக்கறிஞருமான பி.எஸ்.நரசிம்மாவின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த பட்டியலை ஏற்ற ஒன்றிய சட்ட அமைச்சகம், இதற்கு ஒப்புதல் கோரி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது. இந்த பரிந்துரையை முழுமையாக ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 9 புதிய நீதிபதிகளின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கி நேற்று பிற்பகல் உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த 9  நீதிபதிகளும் அடுத்த ஓரிரு தினங்களில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவிப் பிரமாணம்  ஏற்க உள்ளனர். இந்த நியமனத்தின் மூலம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஒரு நீதிபதி பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

* நீதிபதி நாகரத்தனாவுக்கு காத்திருக்கும் பெருமை

நேற்று புதிதாக நியமிக்கப்பட்ட 3 பெண் நீதிபதிகளில் ஒருவரான பி.வி.நாகரத்தனா, பணி மூப்பு அடிப்படையில் வரும் 2027ம்  ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதன் மூலம், நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையை அவர் பெறுவார்.

Related Stories:

>