×

ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்: திற்பரப்பு அருவி திறக்கப்படுமா?: கலெக்டர் அறிவிப்புக்காக காத்திருக்கும் அதிகாரிகள்

அருமனை: குமரியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவியும் முக்கியமான ஒன்று. விடுமுறை நாள் என்று இல்லாமல் தினசரி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும். உள்ளூர், வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்வதை பார்க்க முடிகிறது. தொடர் கனமழை, கொரோனா பரவலின் ஊரடங்கு ஆகிய காரணங்களால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் கூடுதல் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து கடற்கரை, பூங்காக்களுக்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பொது மக்கள் குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலங்களை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர். ஆகவே பல மாதங்களாக களையிழந்து காணப்பட்ட சுற்றுலா தலங்கள் களை கட்டத் தொடங்கி இருக்கிறது.

இதேபோல் திற்பரப்பு அருவிக்கு செல்ல அனுமதி கிடைக்கும் என்ற நோக்கில்  உள்ளூர், வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர். ஆனால் அருவி பகுதிக்கு யாரும் அனுமதிக்கப்படுவது இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் வந்த வழியே ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் அருவியின் மேற்பகுதியில் உள்ள அணை பகுதிக்கு செல்கின்றனர்.

ஆபத்துகளை உணராமல் அங்கு ஆனந்தமாக குளித்து செல்கின்றனர். இப்படி குளிப்பவர்களை கண்காணிக்கவோ, கட்டுபடுத்தவோ யாரும் இல்லை என்பதும் குறிப்பிடதக்கது. இது தொடர்பாக திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணி முத்துகுமார் கூறியதாவது: சுற்றுலா தலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிந்து வந்தோம். 2 முறை வந்தும் திற்பரப்பு அருவியில் குளிக்க முடியவில்லை என்றார்.  திற்பரப்பு அருவி பகுதியில் சுற்றுலா பயணிகளை நம்பி பலர் கடைகள் நடத்துகின்றனர். தற்போது சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதால் அவர்கள் வருமானமின்றி தவிக்கின்றனர். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியது: கலெக்டரின் அறிவிப்புக்கு பிறகுதான் சுற்றுலா பயணிகளை திற்பரப்பு அருவியில் நுழைய அனுமதிப்போம். அதுவரை பழைய முறையே தொடரும் என்றார்.

Tags : Tirprappu Falls , Tirprappu Falls, Tourists
× RELATED திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர்...