சேலம் போலீஸ்காரரை தாக்கிய நிர்வாண ஆசாமி: வீடியோ வைரல்: ‘உப்பு போட்டு சாப்பிட மாட்டேன்’ என சபதம்

சேலம்: சேலம் அருகே நிர்வாண ஆசாமி ஒருவர் போலீஸ்காரரை தாக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், அவரை கைது செய்து சிறையில் அடைக்காததால் சாப்பாட்டில் உப்பு  போட்டு சாப்பிட மாட்டேன் என போலீஸ்காரர் சபதம் செய்துள்ள ஆடியோவும் பரவி அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சேலம் காக்காப்பாளையம் பிரிவு ரோட்டில் கொண்டலாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குடிபோதையில் டூவீலரில் வந்த முதியவரை மடக்கி விசாரித்தனர். அவர், சீரகாப்பாடியை சேர்ந்த ரவி(59) என்பதும், ஓட்டல் கடையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் திடீரென அவரது ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமானார்.

பின்னர் அவர், நாகூசும் ஆபாச வார்த்தைகளால் பேசி, அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவரை தாக்கினார். இதுகுறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் போலீஸ்காரரை விரட்டி விரட்டி ஆபாசமாக பேசுவதும், அடிப்பதுமாக இருக்கிறார். அங்கிருக்கும் ஆட்டோ டிரைவர்கள் போலீஸ்காரரிடம், சார் அவரை அடிபோடுங்கள்’ என்கின்றனர். அதற்கு அந்த போலீஸ்காரர், நாம் அடித்தால் தேவையில்லாத பிரச்னை ஏற்படும் என்கிறார். குடிபோதை ஆசாமி ரவியின் நிர்வாண போஸால், பஸ் ஸ்டாப்பில் இருந்த பெண்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகினர். இதுகுறித்து உடனடியாக கொண்டலாம்பட்டி போலீசாருக்கு அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் தகவல் தெரிவித்தனர். போலீஸ் வாகனத்தில் சென்ற போலீசார், அவரை பிடித்து போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்றனர். அவர் மீது ஆபாசமாக பேசுதல்,  கொலை மிரட்டல் விடுத்தல், தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

இந்நிலையில், இந்த ஆபாச வீடியோ பதிவைத்தொடர்ந்து, போலீஸ்காரர் பேசும் ஆடியோவும் வெளிவந்துள்ளது. அதில் பேசும் அவர், ‘‘பொதுமக்கள் முன்னிலையில் போலீஸ்காரரை அடிக்கிறார். அவர் மீது வழக்கு பதிவு செய்து, கொரோனா பரிசோதனை செய்து சிறையில் அடைக்கவில்லை. ஜாமீனில் விட்டுவிட்டனர். இதனால் எனக்கு மட்டும் அவமானம் இல்லை. அனைத்து போலீசாருக்கும் இது பொருந்தும். எனவே சாப்பாட்டில் உப்பு போட்டு இனி சாப்பிட மாட்டேன்,’’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ மற்றும் ஆடியோ மாநகர போலீஸ் அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>