அரிய கல்வெட்டுகளுடன் சோழர் காலத்தை சேர்ந்தது பக்தர்களால் மீண்டு எழும் சிதிலமடைந்த தெள்ளூர் சிவன் கோயில்: தினமும் வழிபாடு நடக்கிறது

வேலூர்: வேலூர் அருகே பாழடைந்து முற்றிலும் சிதிலமடைந்து கிடந்த சோழர் கால சிவன் கோயில் மீண்டும் புத்துயிர் பெற்று வருவது பக்தர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பண்டைய தமிழகத்தின் தொண்டை மண்டலம் பல்லவர்களுக்கு பின்னர் சோழர்களின் மனம் கவர்ந்த பூமியாகவே விளங்கி வந்தது. காஞ்சியில் பொன்மாளிகை கட்டி தமிழகத்தின் வடக்கு எல்லையை ஆதித்த கரிகாலன் காத்து நின்றதை வரலாற்று ஏடுகள் பறைசாற்றுகின்றன. அந்த வகையில் பிற்கால சோழர்களின் எழுச்சிக்கு தொண்டை மண்டலம் மிகப்பெரும் பங்கு வகித்தது. அதனால்தான் தன் பாட்டனார் அரிஞ்சய தேவனுக்காக ராஜராஜன் திருவலம் மேல்பாடியில், தான் அமைத்த சோமநாதீஸ்வரர் கற்றளியின் எதிரிலேயே பள்ளிப்படை கோயிலை கட்டி வைத்தான்.

அதேபோல் வேலூர் அடுத்த சோழவரம் கிராமத்தில் பெண்களுக்கான தனிச்சிறைச்சாலையை சோழர்கள் அமைத்ததை வரலாற்று குறிப்புகள் நமக்கு கூறுகின்றன. அதற்கான எச்சங்களாக சோழவரத்தின் ஜவ்வாது மலையை ஒட்டி அமைந்த சிவன் கோயிலும், விஷ்ணு கிரகமும், பிற உடைந்த கற்தூண்கள், சுவாமி சிலைகள், சிதைந்து போன கங்க அரசனின் பள்ளிப்படை கோயில் எச்சங்களும் சிதறி கிடந்து சாட்சி சொல்லி கொண்டிருக்கின்றன.இதுபோன்று ஏராளமான சிவாலயங்கள் தொண்டை மண்டலம் எங்கும் சோழர்களால் கட்டப்பட்டு இன்று அவற்றில் பலவும் தனது அடையாளத்தை தொலைத்து சிதிலமடைந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதுபோன்ற அடையாளங்களை மீட்டெடுத்து அதன் வரலாற்று தகவல்களை வெளிப்படுத்தும் பணியை அமைதியாக செய்து வருகின்றனர் வேலூரை சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள்.அப்படி அவர்களால் கண்டறியப்பட்டதுதான் வேலூர் அடுத்த தெள்ளூர் கிராமத்தில் வேலூர் விமான நிலையம் அருகில் புதர்கள் மண்டி சிதிலமடைந்த நிலையில் மண்ணோடு மண்ணாக அரிய கல்வெட்டு தகவல்களுடன் கூடிய ஈசனின் கோயில்.

இதுபற்றி அக்குழுவில் உள்ள சரவணன்ராஜா என்பவர் மூலம் நேரில் சென்று அறிந்து இக்கோயிலை மீட்டெடுப்பதுடன், அதன் வரலாற்று தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும் என்று தினகரனில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி விரிவான செய்திக்கட்டுரை படங்களுடன் வெளியானது.இதையடுத்து காஞ்சிபுரம் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து சிவனடியார்கள் வந்து கோயிலை மூடியிருந்த புதர்களையும், பாம்பு புற்றுகளையும் அகற்றி ஓரளவு சிதிலமடைந்த நிலையிலேயே கோயிலை மீட்டனர். அப்போது அங்கு சப்தமாதர்கள் புடைப்பு சிற்பங்கள் அடங்கிய கற்பலகையும், நந்தி சிலையும், ஆவுடையாரும், பைரவர் சிலைகளும், பிற உடைந்த சிலைகளும் கண்டெடுக்கப்பட்டது.

வெளியூரில் இருந்து சிவனடியார்கள் வந்து உழவாரப்பணியை மேற்கொண்டதை பார்த்த உள்ளூர் இளைஞர்களில் ஒருவர் தாமாக முன்வந்து கோயிலை தன் பொறுப்பில் எடுத்து தற்போது ஓரளவு சீரமைத்து தினமும் பூஜைகளை செய்து வருகிறார். பிரதோஷம் அன்று சிறப்பு பூஜை நடக்கிறது. ஆனால் ஆவுடையார் மேல் லிங்கம் இல்லாததால் லிங்கத்திற்கு பதில் தேங்காய் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.இக்கோயிலை கிராம மக்களும், வசதிபடைத்த ஆன்மீகவாதிகளும், அரசின் தொல்லியல்துறையும் இணைந்து முழுமையாக சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவதுடன், அதன் வரலாற்று தொன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்களும், ஆன்மீகவாதிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>