×

சிவகங்கை மாவட்டத்தில் 30 ஆண்டுகளாகியும் மாறாத தொழில் வளம்: அரசு நடவடிக்கை எடுக்குமா?

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு எத்தனை தொழில் நிறுவனங்கள் இருந்ததோ அதேநிலையிலேயே தற்போதும் உள்ளது. எனவே அரசு தொழில் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்டது. இங்கு விவசாயம் தவிர குறிப்பிட்டு சொல்லும்படி தொழில்கள் எதுவும் இல்லை. சிவகங்கை அருகே கோமாளிபட்டி சேந்திஉடையநாதபுரத்தில் தமிழ்நாடு அரசிற்கு சொந்தமான கிராபைட் கனிம நிறுவனம் (டாமின்) உள்ளது. 1994ம் ஆண்டு இயங்க தொடங்கிய இந்த ஆலையில் நிலத்தில் உள்ள கிராபைட் கல்லை வெட்டியெடுத்து அதிலிருந்து கிராபைட்டை பவுடராக பிரித்து எடுக்கும் பணி நடக்கிறது.

தொழிற்சாலை தொடங்கிய போது எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் போதிய விரிவாக்க திட்டமின்றியே தற்போதும் செயல்பட்டு வருகிறது. தொடக்க நிலையில் இருந்தது போல் தற்போதும் 200 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர். காரைக்குடி மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், காளையார்கோவில் காளீஸ்வரா டெக்ஸ்டைல்ஸ் மில் உள்ளிட்ட சில மத்திய அரசு நிறுவனங்களில் நிரந்தர பணியாளர்கள் சுமார் 600 பேர் வரை பணிபுரிகின்றனர். இவைகள் தவிர அரசு நிறுவனங்கள் குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை. தனியார் டெக்ஸ்டைல்ஸ் மில்கள் என சுமார் 10 மில்கள் உள்ளன. மானாமதுரை, சிவகங்கை உட்பட சில இடங்களில் சிறிய அளவிலான சிப்காட் அமைக்கப்பட்டு அங்கு தனியார் தொழிற்சாலைகள் நடத்தி வருகின்றனர். இதிலும் கூடுதல் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் இல்லை. சிவகங்கை அருகே வேலைவாய்ப்பு
உருவாகும் என தொடங்கப்பட்ட ஸ்பைசஸ் பார்க் செயல்பாடில்லாமல் முடங்கியுள்ளது. மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் என்ன நிலையில், எத்தனை தொழில் நிறுவனங்கள் இருந்ததோ அதேநிலையிலேயே தற்போதும் உள்ளது. இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அரசனூர் சிப்காட்டில் பெரிய தொழிற்சாலைகளும், கூடுதல் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரியும் தனியார் தொழில் நிறுவனங்கள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து வர்த்தக சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது, ‘சிவகங்கை மாவட்டத்தில் தொடர் வறட்சி காரணமாக விவசாய தொழிலும் குறைந்து வருகிறது. விவசாய தொழில் தெரிந்தவர்கள் இன்று எந்த வேலை கிடைத்தாலும் செய்ய வேண்டிய அவலநிலையில் உள்ளனர். மாவட்டத்தில் அரசு சார்பில் அதிக தொழிலாளர்கள் வேலை பார்க்கக்கூடிய தொழில் நிறுவனங்கள் தொடங்க வேண்டும். தனியார் தொழிற்சாலைகளும் குறிப்பிட்ட மாவட்டங்களியே தொடங்கப்படுகிறது. சிவகங்கை போன்ற மாவட்டங்களுக்கு அவற்றை பரிந்துரை செய்ய வேண்டும். காலம், காலமாக வெளிநாடுகள், வெளிமாவட்டங்களுக்கு சென்று பணிபுரியும் நிலையை மாற்ற தொழில் வளத்தை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Sivagangai , Has been in Sivagangai district for 30 years Unchanging Career Resources: Will the Government Take Action?
× RELATED மாநில அளவிலான போட்டிக்கு கூடைப்பந்து வீரர்கள் இன்று தேர்வு