மழையால் நிரம்பி வழியும் வரதமாநதி அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

பழநி:  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழையால், பழநி அருகே உள்ள வரதமாநதி அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் வரதமாநதி அணை உள்ளது. அணையின் உயரம் 67 அடியாகும். பழநி நகர் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பழநி பகுதி விவசாயத்துக்கும் ஆதாரமாக இந்த அணை உள்ளது. அருகில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் மலையடிவாரத்தில் மழை பெய்யும்போது இந்த அணைக்கு தண்ணீர் வரத்து இருக்கும்.கடந்த சில தினங்களாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் மலையடிவார பகுதியில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் வரதமாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வரதமாநதி அணை தனது முழு கொள்ளளவான 67 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 105 கன அடி நீர் வருகிறது. அணை முழு கொள்ளளவை எட்டியதால், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதியில் பெய்த மழை அளவு 30 மில்லிமீட்டராக பதிவாகியுள்ளது.

இதுபோல் பழநி அருகே 65 அடி உயரமுள்ள பாலாறு-பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 46.29 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 480 கன அடி நீர் வருகிறது. அணையிலிருந்து 22 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதியில் பெய்த மழை அளவு 2 மில்லிமீட்டராக பதிவாகியுள்ளது. இதுபோல் 80 அடி உயரமுள்ள குதிரையாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 66.47 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 15 கன அடி நீர் வருகிறது. 8 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதியில் பெய்த மழையளவு 21 மில்லிமீட்டரக பதிவாகியுள்ளது. தொடர்மழையால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டிருப்பதால், பழநி பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories:

>