ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் பதில் ஆன்லைன் சூதாட்டங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது: மாநில அரசுகளே பொறுப்பு என தகவல்

புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவினாஷ் மெரோட்ரா என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘சூதாட்டம், பெட்டிங், பந்தயம் கட்டுதல் போன்றவைகளுக்கு பல மாநில அரசுகள் தடை விதித்துள்ள போதிலும், இந்தியாவில் ஏராளமான இணையதளங்கள் மூலமாக ஆன்லைன் சூதாட்டம் கொடிகட்டிப் பறக்கிறது. இவை அனைத்திற்கும் சட்டப்பூர்வமாக தடை விதிக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.என்.படேல் தலைமையிலான அமர்வு, ஒன்றிய, டெல்லி மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நேற்று ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘சூதாட்டம், பெட்டிங் போன்றவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருபவை. இதில் ஒன்றிய அரசு நேரடியாக தலையிட்டு தடை விதிக்க முடியாது. மாநில அரசுகள் தான் சம்மன் அனுப்பி நடவடிக்கை எடுக்க முடியும். எந்த சூதாட்ட இணையதளத்தையும் முடக்கும் சட்டப்பூர்வ அதிகாரம் ஒன்றிய அரசுக்கு இல்லை,’ என கூறப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.என்.படேல், விசாரணையை வரும் அக்டோபர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் மிக அபாயகரமானவை என கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, அவை சம்பாதிப்பதற்காக இளைஞர்கள் செலவழிப்பதை அனுமதிக்க முடியாது என்றார்.

Related Stories:

>