×

ராணிப்பேட்டை நெல்கொள்முதல் முறைகேடு சிபிசிஐடி விசாரணை: அமைச்சர் தகவல்

சென்னை: ராணிப்பேட்டை நெல்கொள்முதல் விவகாரத்தில் நடந்த முறைகேடுகளை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று கூட்டுறவு மற்றும் உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் சக்கரபாணி அளித்த பதில்: நன்னிலம் காமராஜ்(அதிமுக): 2021 மே மாதம் நடந்த டெண்டர் ஒன்றில் முறைகேடு நடந்துள்ளது என்றும், அதில் கடந்த அதிமுக ஆட்சி சம்பந்தப்பட்டிருப்பதாக உணவு துறை அமைச்சர் குற்றம்சாட்டினார். பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்களை, உடனடியாக ஏலம் விட்டுவிட முடியாது. ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட கமிட்டி உள்ளது. போர்டு உள்ளது. அந்த போர்டில் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். அந்த போர்டு கூடி மார்க்கெட் விலையை விட ஒரு ரூபாய் கூட அதிகமாக கொடுக்க முடியாது. இந்த டெண்டரில் முறைகேடு நடந்திருந்தால் விசாரியுங்கள். தவறு இருந்தால் நடவடிக்கை எடுங்கள்.

அமைச்சர் சக்கரபாணி: பருப்பு விலை ரூ.120க்கு அன்றைக்கு டெண்டரில் குறிப்பிட்டிருந்தனர். இன்று திமுக ஆட்சியில் ரூ.76க்கு வாங்கியதால் அரசுக்கு ரூ.75 கோடி லாபம். அதேபோன்று பாமாயிலில் ரூ.5 கோடி லாபம் கிடைத்துள்ளது. அரசுக்கு ரூ.80 கோடி லாபம் கிடைத்துள்ளது. அதிமுக ஆட்சியில், டெண்டரில் கலந்து கொண்டவர்கள் வெறும் 3 பேர்தான். இன்று டெண்டர் எளிமையாக்கப்பட்டு 20 பேர் டெண்டரில் கலந்து கொண்டுள்ளனர். விழுப்புரத்தில் ரூ.100 கோடிக்கு குடோன் கட்டியுள்ளனர். கஜா புயலின் போது குடோன் பக்கத்தில் ஒரு செடி கூட ஆடவில்லை. வேறெல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் இந்த குடோன் மட்டும் சேதமடைந்துள்ளது. அதற்கு ரூ.60 கோடி செலவழித்திருக்கிறீர்கள். ராணிப்பேட்டையில் நடந்த நெல் கொள்முதல் நிலையத்தில் என்னென்ன தவறு நடந்ததெல்லாம் குறித்து இன்று சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு வழங்கியுள்ளோம். எனவே இந்த துறையில் கடந்த காலத்தில் யார் தவறு செய்திருந்தாலும் தக்க நடவடிக்கை எடுப்போம்.

Tags : CBCID ,Ranipettai ,paddy ,Minister , CBCID probe into Ranipettai paddy procurement scam: Minister informed
× RELATED பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன்...