அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில் அதிரடி முதல்வர் அமரீந்தர் தலைமையில் தான் பஞ்சாப் தேர்தலில் காங். போட்டியிடும்: காங். பொது செயலாளர் ராவத் அறிவிப்பு

சண்டிகர்:  ‘அடுத்தாண்டு நடைபெற இருக்கும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் சந்திக்கும்,’ என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு இவருக்கும், முன்னாள் அமைச்சருமான நவஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. இம்மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், இருவருக்கும் இடையிலான பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக அமரீந்தரின் எதிர்ப்பையும் மீறி சித்துவை மாநில காங்கிரஸ் தலைவராக நியமித்தது.

இதனிடையே, காஷ்மீர், பாகிஸ்தான் விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சித்துவின் ஆலோசகர்களின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த அமரீந்தர் சிங் அவர்களை அடக்கி வைக்கும்படி  சித்துவுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதன் மூலம், சித்துவுக்கும் அவருக்கும் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. அதே நேரம், அமரீந்தரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கும்படி 4 அமைச்சர்களும், சில காங்கிரஸ் எம்எல்ஏ.க்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான ஹரிஷ் ராவத்தை இந்த 4 அதிருப்தி அமைச்சர்களும் டேராடூனில் நேற்று சந்தித்து பேசினர்.

அதோடு, சீக்கியர்களின் புனித நூலை அவமதித்த விவகாரம், போதை பொருள் கடத்தல் வழக்கு ஆகியவற்றில் முதல்வர் நடவடிக்கை எடுக்காததால் அவர் மீது நம்பிக்கை இழந்துள்ளதாக கூறி அவரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக 20க்கு மேற்பட்ட எம்எல்ஏ.க்கள் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், அதிருப்தி அமைச்சர்களிடம் பேசிய பிறகு ஹரிஷ் ராவத் அளித்த பேட்டியில், ``அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையில் தான் காங்கிரஸ் போட்டியிட உள்ளது,’’ என்றார். இதன் மூலம், `முதல்வரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை,’ என்பதை ராவத் அதிருப்தி அமைச்சர்களிடம் மறைமுகமாக தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: