பொதுத்துறை வங்கிகளின் ஓய்வூதிய பங்களிப்பு 14 சதவீதமாக உயர்வு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மும்பை: பொதுத்துறை வங்கிகளின் ஓய்வூதிய பங்களிப்பை 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தி, ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2 நாள் பயணமாக மும்பை வந்துள்ளார். அங்கு இந்திய தொழில் கூட்டமைப்பின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் பொதுத்துறை வங்கிகளுக்கான நடப்பு நிதியாண்டின் மறு சீரமைப்பு திட்டத்தை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்புகள், தொழில்துறை மற்றும் வர்த்தக அமைப்புகளுடன் வங்கிகள் கலந்துரையாட வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஏற்றுமதியாளர்களின் குறைகளை உரிய நேரத்தில் தீர்க்க இது வழி வகுக்கும். புதிதாக உருவாகும் பல தொழில்துறைகளுக்கு, நிதி தேவைப்படுகிறது. இந்த நிதியுதவி எளிதாக கிடைப்பதை வங்கிகள் உறுதிப்படுத்த வேண்டும். இதுபோல், தொழில்நுட்ப விஷயங்களில் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும். பொதுத்துறை வங்கிகளின் ஓய்வூதிய பங்களிப்பு, தற்போதுள்ள 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதன்மூலம், வங்கி ஊழியர்கள் இறந்தால், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்கெனவே பெற்று வந்த ரூ.9,284 க்கு பதிலாக, கடைசியாக ஊழியர் வாங்கிய சம்பளத்தில் 30 சதவீதம் பென்ஷனாக கிடைக்கும் இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

* அரசு பங்குகள் விற்பனை

முக்கிய துறைகளில் அரசின் பங்களிப்பை பெயரளவுக்கு வைத்துக்கொண்டு பிறவற்றை விற்பது என ஒன்றிய அரசு முடிவு செய்து செயல்படுத்தி வருகிறது. இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘வங்கிகள் மற்றும் நிதி சேவைகள் முக்கிய துறைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே, வங்கிகளை மேலும் ஒன்றிணைத்து எண்ணிக்கை குறைக்கப்படும் அல்லது காப்பீடு நிறுவனங்களில் பெயரளவுக்கு அரசு பங்குகளை வைத்துக்கொண்டு மற்றவை விற்கப்படும்,’’ என்றார்.

Related Stories:

More