×

கிரு நீர் மின் திட்டத்தில் சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா மீறவில்லை: பாக். குற்றச்சாட்டுக்கு மறுப்பு

புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே பாயும் நதிகளின் நீரைப் பகிர்ந்து கொள்வது குறித்து 1960ல் சிந்து நதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, சட்லஜ், பியாஸ், ரவி நதிகளில் பாயும் நீரை, இந்தியாவும் சிந்து, ஜீலம், செனாப் நதிகளின் பெரும் பகுதியை பாகிஸ்தானும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நதிகளில் சில கட்டுப்பாடுகளுடன், நீர் மின் நிலையங்களை அமைத்துக் கொள்ளலாம். இந்நிலையில், 624 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் விதமாக ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே கிரு நீர் மின் நிலையம் கட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது.

இதற்கான வடிவமைப்பு குறித்த தகவல்கள் பாகிஸ்தானுக்கு கடந்த ஜூன் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த நீர்மின் நிலையம் சிந்து நதி ஒப்பந்தத்தை மீறி கட்டுப்படுவதாக பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை இந்தியா மறுத்துள்ளது. இந்தியாவின் சிந்து நதி கமிஷனர் பி.கே.சக்சேனா அளித்த பேட்டியில், ‘‘செனாப் நதியில் நீர் மின் நிலையம் கட்ட இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது. இந்த நீர் மின்நிலையம் சிந்து நதி ஒப்பந்தத்திற்கு உட்பட்டே வடிவமைக்கப்பட்டு உள்ளது. சிந்து நதி ஒப்பந்த ஆணைய ஆண்டு கூட்டம் விரைவில் பாகிஸ்தானில் நடக்க உள்ளது. அந்த கூட்டத்தில் கிரு நீர் மின் நிலைய விவகாரம் குறித்து பாகிஸ்தானின் கவலைகளுக்கு பதிலளித்து உரிய தீர்வு காணப்படும்,’’ என்றார்.

Tags : India ,Indus ,Kiru , India does not violate Indus agreement on Kiru hydropower project: Pak. Denial of charge
× RELATED பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை...