×

மாநகராட்சியாகும் காஞ்சிபுரம்: மக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாநகராட்சி அந்தஸ்து திமுக அரசால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதால் காஞ்சிபுரம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சட்டபேரவையில் பேசிய அமைச்சர் கே.என். நேரு காஞ்சிபுரம் பெரு நகராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். 36.14 ச.கி.மீ பரப்பளவு கொண்ட காஞ்சிபுரம் நகராட்சியில் 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப் படி 2,34,353 மக்கள் வசிக்கின்றணர். அண்ணா பிறந்த மண்ணான  காஞ்சிபுரம் 1921ஆம் ஆண்டு 40 வார்டுகளுடன் நகராட்சி அந்தஸ்து பெற்றது.

முதல் நகராட்சித் தலைவராக ராவ் பகதூர் சம்மந்த முதலியார் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து 18 நகராட்சித் தலைவர்கள் என மொத்தம் 19 நகராட்சித் தலைவர்கள் காஞ்சிபுரம் நகராட்சியின் தலைவர்களாக பதவி வகித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2011 ம் ஆண்டு தேனம்பாக்கம், செவிலிமேடு, நத்தப்பேட்டை, ஓரிக்கை பகுதிகளை இணைத்து 51 வார்டுகளாக காஞ்சிபுரம் பெருநகராட்சி அந்தஸ்து பெற்றது. ஆனாலும் காஞ்சிபுரம் மாநகராட்சியாக எப்போது தரம் உயர்த்தப்படும் என காஞ்சிபுரம் பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு காஞ்சிபுரம் மாநாகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். எனவே காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான கோனேரிக்குப்பம், வையாவூர், களியனூர், புத்தேரி, ஏனாத்தூர், கருப்படிதட்டடை, திம்மசமுத்திரம், சிறுகாவேரிப்பாக்கம், அம்பி, கீழ்கதிர்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளை இணைத்து மாநாகரட்சியாக தரம் உயர்த்த வாய்ப்பு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் லட்சுமி தெரிவித்ததாவது: காஞ்சிபுரம் பெருநகராட்சி மாநகராட்சியாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளதால், இதற்கான வேலைகள் விரைவில் தொடங்கும். மேலும் காஞ்சிபுரம் நகராட்சி மாநகராட்சியானால் ஸ்மார்ட் சிட்டி, அம்ருத் திட்டங்கள் மூலம் மக்கள் எளிதில் பயன்பெற முடியும் என்று தெரிவித்தார். காஞ்சிபுரம் நகர்மன்ற முன்னாள் தலைவரும், திமுக நகர செயலாளருமான சன்பிராண்ட் ஆறுமுகத்திடம் இதுகுறித்து கேட்டபோது, காஞ்சிபுரம் பெருநகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற திமுக அரசின் அறிவிப்பை பொதுமக்கள் பெரிதும் வரவேற்கின்றனர். இதன்மூலம் காஞ்சிபுரம் நகர மக்களின் நெடுநாள் கனவு நிறைவேறி உள்ளது. இதனால் மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். இதன்மூலம் மக்களுக்காக பாடுபடும் கட்சி திமுக என்பது நிரூபணம் ஆகியுள்ளது என்று தெரிவித்தார்.

காஞ்சிபுரம் நகர காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், நகர்மன்ற முன்னாள் கவுன்சிலருமான ஆர்.வி.குப்பன் தெரிவித்ததாவது: காஞ்சிபுரம் மாநாகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற திமுக அரசின் அறிவிப்பை பொதுமக்கள் வரவேற்கின்றனர். அதே நேரத்தில் மக்களை பாதிக்காமல் வரி விதிப்பு இருக்கவேண்டும். கோயில் மற்றும் சுற்றுலா நகரமான காஞ்சிக்கு வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வருவதால் பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் பூங்காக்கள் ஏற்படுத்த வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். கீழ்கதிர்பூர் பேருந்து நிலையப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

* நகராட்சிக் கட்டிடம் பழமை மாறாமல் புதுப்பிப்பு
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று முழங்கியவர் பேரறிஞர்  அண்ணா. மேலும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று சமதர்ம சமுதாயம் உருவாக பாடுபட்டவரும், திமுக வை தோற்றுவித்தவருமான அண்ணா காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராக பணிபுரிந்த சிறப்பைப் பெற்றது காஞ்சிபுரம் நகராட்சி. இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் பெயரில் செயல்படும் நகராட்சிக் கட்டிடம் இன்றளவும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Kanchipuram , Corporation Kanchipuram: People are happy
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...