×

திருத்தணி அரசு கல்லுாரியில் இன்று கலந்தாய்வு துவக்கம்

திருத்தணி:  திருத்தணி அரசினர் கலைக் கல்லுாரியில், 2021-2022ம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள்சேர கடந்த மாதம், 23ம் தேதி முதல் இம்மாதம், 10ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். மொத்தம், 2200 மாணவ மாணவியர் இளங்கலை (இளநிலை) முதலாம் ஆண்டில் சேர விண்ணப்பம் செய்திருந்தனர். கலந்தாய்வு நிகழ்ச்சி கல்லுாரி வளாகத்தில் இன்று தொடங்கி அடுத்த மாதம், 2ம் தேதி வரை நடைபெறுகிறது. கல்லுாரி முதல்வர் விஜயலட்சுமி கூறுகையில், நடப்பு கல்வியாண்டில் இளங்கலை படிப்பில் சேர ‘கட்ஆப்’ மதிப்பெண் 300 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் மட்டும் முதல் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்கவேண்டும்.

இன்று நடக்கும் முதல் நாள் கலந்தாய்வு நிகழ்வில், மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவ வீரர், அந்தமான்நிக்கோபார் தமிழ் அறிஞர்களின் மாணவர்கள் போன்ற சிறப்புப்பிரிவினர் பங்கேற்கலாம். வரும், 27ம் தேதி கணிதம், இயற்பியல், கணிப்பொறி அறிவியல், கணிணி பயன்பாட்டியல், 31ம் தேதி வணிகவியல் (பொது), வணிகவியல் ஆகிய பிரிவுகளில் சேரும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம். செப்.1ம் தேதி வணிக நிர்வாகவியல் துறை, வரலாறு, பொருளாதாரம், 2ம் தேதி தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் ஆகிய பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவர்கள், 70 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்தவர்கள் மட்டும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Thiruthani ,Government ,College , The seminar starts today at Thiruthani Government College
× RELATED திருத்தணியில் வருமான வரித்துறை சோதனை!!